காசாவில் இஸ்ரேலின் வான் தாக்குதலில் பலஸ்தீனர் பலி

இரண்டு நாட்களாக இடம்பெற்ற ரொக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக காசா பகுதி மீது இஸ்ரேல் சனிக்கிழமை நடத்திய வான் தாக்குதலில் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

கடந்த செப்டெம்பருக்கு பின்னர் இடம்பெற்ற இந்த வான்முறைகள் குறித்து கண்டனம் வெளியிட்டிருக்கும் காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பு இந்த தாக்குதல்களின் விளைவுகளுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஹமாஸ் இலக்குகள் மீது சூரியோதயத்திற்கு முன்னர் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 27 வயது அஹமது அல் சஹ்ரி என்பவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

எனினும் கொல்லப்பட்டவர் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

தெற்கு காசாவில் சனிக்கிழமை இடம்பெற்ற சஹ்ரியின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் பங்கேற்றனர்.

சிறிய மற்றும் மக்கள் செறிவு கொண்ட காசா எங்கும் குண்டுச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருக்கும் ஏ.எப்.பி செய்தியாளர் விபரித்துள்ளார்.

காசாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு இஸ்ரேல் மீது குறைந்தது 10 ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதில் சேதங்கள் இடம்பெற்றபோதும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை