வற்வரி குறைப்பு; 7 வரிகள் நீக்கம்

பொருளாதார புத்தெழுச்சி பொதி

டிச. 01ஆம் திகதி முதல் அமுல்

 

 பொருளாதார சேவைகள் வரி

 பங்குச் சந்தை வரி

 உழைக்கும் போது செலுத்தும் வரி

 வட்டி மீதான வரி

 தேசத்தை கட்டியெழுப்பும் வரி

 கடனெல்லை மீதான வரி

 பொருளாதார சேவை கட்டணம்

 

பொருளாதார புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு நிவாரணப் பொதியொன்றை உடனடியாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய ‘வற்’ வரியை 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைப்பதற்கும் 7 வகையான வரி வகைகளை முழுமையாக இரத்துச் செய்வதற்கும் அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

டிசம்பர் முதலாம் திகதி முதல் இந்த வரிச் சலுகை அமுலுக்கு வருவதோடு இதனூடாக எதிர்வரும் தினங்களில் பொருட்கள் சேவைகளின் விலைகள் குறையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முதலாவது ஊடக மாநாட்டின் போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கூறுகையில்,

நிர்மாணத்துறையிடமிருந்து அறவிடும் வருமான வரி,மதஸ்தலங்களிடமிருந்து அறவிடும் வரிகள் என்பனவும் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு வர்த்தக நிலையங்களில் இருந்து ‘வற்’ வரி அறிவிடும் வருமான எல்லையும் அதிகரிக்கப்பட்டு பாரிய சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் மக்களுக்கு மூச்சு விட சந்தர்ப்பம் வழங்கும் வகையிலும் தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்துவதற்காகவும் பாரிய நிவாரண பொதியொன்றை உடனடியாக வழங்க ஜனாதிபதி அமைச்சரவைக்கு யோசனையொன்றை சமர்ப்பித்தார்.

இதிலுள்ள அனைத்து யோசனைகளையும் துரிதமாக வர்த்தமானி அறிவித்தல் மற்றும் சட்டத் திருத்தங்களினூடாக நிறைவேற்றுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நிலையில் உடனடியாக நாட்டு மக்களுக்கு அனுகூலங்கள் கிடைக்கும் வகையில் வரி குறைப்புகளையும் வரி விடுவிப்புகளையும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டுப் பாவனைக்கான பொருட்கள் சேவைகள் மீதான தேசத்தை கட்டியெழுப்பும் வரி,பொருளாதார சேவைக் கட்டணம்,வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அறவிடும் நிறுத்தி வைத்தல் வரி (debit tax), பங்குச் சந்தையில் அறவிடும் இலாபத்தின் மீதான வரி, உழைக்கும் போதே செலுத்தும் வருமான வரி (Payee Tax) வட்டி மீதான பல்வேறு நிறுத்தி வைத்தல் வரி, கடனெல்லை மீதான வரி என்பன உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சகல மக்களிடமிருந்து அறிவிடப்படும் மறைமுக வரியான பெறுமதிசேர் வரி (வற் வரி-VAT)க்கு எதிராக நாம் எதிரணியில் இருந்து போது தொடர்ச்சியாக குரல் கொடுத்தோம். மக்கள் மீது சுமையேற்றும் இந்த வரியை 8 சதவீதமாக குறைப்பதாக கோட்டாபய ராஜபக்ச தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந்தார். இதற்கமைய சகல பொருட்கள் சேவைகள் மீது அறிவிடப்படும் 15 வீத ‘வற்’ வரியையும் 2 வீத தேசத்தை கட்டியெழுப்பும் வரியையும் இணைத்து 17 வீத வரியை 8 வீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் முதலாம் திகதி முதல் இந்த வரிச் சலுகை அமுலுக்கு வருகிறது.

ஒரு மில்லியன் ரூபா மாத வருமானமுள்ள நிறுவனங்களிடமிருந்து ‘வற்’ வரி அறிவிடப்பட்டது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் 25 மில்லியனுக்கு கூடுதலான வருமானம் பெறும் நிறுவனங்களிடமிருந்தே ‘வற்’ வரி அறிவிடப்படும். இதனூடாக சிறு மத்திய மற்றும் சில பாரிய வர்த்தகங்களுக்கு இதனூடாக பாரிய அனுகூலங்கள் கிடைக்கும். வருடத்திற்கு 300 மில்லியன் வருமானம் பெற்றால் தான் ‘வற்’ வரி செலுத்த வேண்டியிருக்கும்.

நிர்மாணத்துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புள்ள துறையாகும். கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் அதிக வளர்ச்சி கண்ட துறையாகும். இந்தத் துறை செயலிழந்துள்ளதால் இத் துறையுடன் தொடர்புள்ள பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டனர்.

இத் துறைக்கு புத்தூக்கம் ஏற்படுத்துவதற்காக நிர்மாணத்துறையிடமிருந்து அறவிடப்படும் வருமான வரியை 28 வீதத்தில் இருந்து 14 ஆக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாடி வீடுகளிலிருந்து அறிவிடும் ‘வற்’ வரி ,சகல மதஸ்தலங்கள் மீதான சகல வரிகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் தொழில்புரிந்து இலங்கையர்களின் வருமானங்கள் மீது அறிவிடப்பட்டு சகல வரிகளுக்கும் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பாடல் வரி 25 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரிச்சலுகைகளினூடாக மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். வரவு - செலவுத் திட்டத்தினூடாக கிடைக்கும் நிவாரணங்களை விட அதிக நன்மைகள் இதனூடாக மக்களுக்கு கிடைக்கும்.

இந்த வரிச்சலுகைகளினூடாக அரசாங்கம் வருமான இழப்பு ஏற்படும். இதற்கு முகங்கொடுப்பதற்கான வழிகளையும் அரசாங்கம் அடையாளங் கண்டுள்ளது. கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியைப் போன்றே இந்த அரசும் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யும். சிறு குழுவை நசுக்கி பலாத்காரமாக வரி அறிவிடுவதற்கு பதிலாக அதிகமானவர்களிடம் குறைந்த வீதமான வரியை அறிவிடுவதே எமது நோக்கமாகும். இந்த சலுகைகளினூடாக சகல துறைகளிலும் புத்துணர்வு ஏற்படும். உற்பத்திகள் அதிகரிக்கும். சுற்றுலாத்துறை அடங்கலான அநேக துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அடுத்த வருடத்தில் வரி வருமானம் உயரும்.

85 வீதமாகவுள்ள வரியல்லாத வருமானத்தை அதிகரித்து அரசின் வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். முன்மாதிரியாக ஜனாதிபதி வீண்விரயங்களை குறைத்துள்ளார் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Thu, 11/28/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக