54 எம்.பிகளுக்கு எதிராக அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்

சபையில் குழப்பம் விளைவித்த

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

2018 ஒக்டோபரில் ஏற்பட்ட 51 நாள் ஆட்சியில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதலுடன் தொடர்புள்ள 54 எம்.பிகளுக்கும் எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் தரப்பு எம்.பிகளும் ஜே.வி.பி எம்.பிகளும் நேற்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் சட்ட மாஅதிபருக்கு அறிக்கை வழங்கியுள்ளதாகவும் தேவையான நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளதாகவும் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற சிறப்புரிமை குழுவினூடாகவும் இது பற்றி ஆராயப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் மிளகாய்த் தூள் வீசி சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் ஆளும்தரப்பு அமைச்சர்கள் பலரும் கருத்து வெளியிட்டனர்.

சபாநாயகர் கரு ஜயசூரிய

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை நடைபெற்றது. சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கும் முன்வைக்கப்பட்டுள்ளது.எனக்கு இது தொடர்பில் முடிவு எடுக்க முடியாது.தேவையான நடவடிக்கை எடுப்பதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிமல் ரத்னாயக்க எம்.பி,

54 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தினூடாக எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் உள்ளன. அவை கூட எடுக்கப்படவில்ல.

சபாநாயகர்

இது தொடர்பாக நிலையியற் கட்டளை குழுவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நினைவூட்டல் வழங்குகிறேன். பாராளுமன்றத்தில் நடைபெற்ற சண்டை தொடர்பில் 54 பேருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன நடந்தது என்பது சகலருக்கும் தெரியும்.இவர்கள் குற்றவியல் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டனர்.

சுனில் ஹந்துன்நெத்தி

சட்ட மாஅதிபருக்கு இது தொடர்பான அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கூறினார். விஜித ஹேரத்தை தாக்கியது தொடர்பில் செயற்படவும் சட்ட மாஅதிபரின் ஆலோசனை வேண்டுமா? இதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆஷு மாரசிங்க

இந்த சம்பவங்கள் இனியும் நடைபெறக் கூடாது. இதனுடன் தொடர்புள்ளவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். பிரதி சபாநாயகரின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை ஏன் செயற்படுத்த முடியாது.

அமைச்சர் அஜித் பி பெரேரா

பாராளுமன்றத்தினுள் நடைபெற்ற இந்த குற்றவியல் சட்ட மீறலினூடாக சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிக்கை சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு முன்வைக்கப்பட்டாலும் தாமதம் காணப்படுகிறது.மிளாகாய்த் தூள் அடித்தோருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிறப்புரிமை குழுவில் இந்த விடயம் ஆராயப்பட்டாலும் முன்னுரிமை வழங்கப்படவில்லை.எனவே விசாரணைக் குழுவின் தலைவருடன் ​பேசி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காமினி லொகுகே (ஐ.ம.சு.மு)

16 ஆம் திகதி நாட்டு மக்கள் சரியான முடிவெடுப்பார்கள்.அதன் மூலம் யார் சரியானவர்கள் என்பது உறுதியாகும்.

அமைச்சர் அஜித் பி பெரேரா

ஒலிவாங்கி, கதிரை என்பவற்றை உடைத்தது சரியானதா? 16 ஆம் திகதி எவரும் இதனை காணமாட்டார்கள்.

பிமல் ரத்நாயக்க எம்.பி

அறிக்கையிலுள்ள 54 பேரில் சபைக்கு தலைமை தாங்கும் எம்.பிகள் பட்டியிலில் உள்ளவர்களும் இருக்கிறார்கள்.இது பற்றி சபாநாயகருக்கு அறிவித்ததையடுத்து ஒருவரை சபாநாயகர் நீக்கினார்.இவ்வாறானவர்களுடன் எமக்கு ஒன்றாக செயற்பட முடியாது என்றார்.

Fri, 11/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை