தோட்டத் தொழிலாளர்கள் வாக்களிக்க 4 மணிநேர அனுமதி

காலை 7.00 முதல் 5.00 வரை நேரத்தை தோட்ட நிர்வாகம் தீர்மானிக்கும்

தோட்டத் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக நான்கு மணி நேர விடுமுறையை வழங்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தோட்ட கம்பனிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஐந்து மணி நேர விடுமுறை வழங்கவேண்டுமென தொழிலாளர் தேசிய முன்னணி தேர்தல்கள் ஆணையகத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்த நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்கள் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக காலை 7 மணிமுதல் பி.ப 12 மணிவரை விடுமுறை வழங்க வேண்டுமென கம்பனிகளை அறிவுறுத்துமாறு தேர்தல்கள் ஆணையத்திடம் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் நேற்றுக் காலை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.

கடந்த காலங்களில் காலை முதல் பகல் வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிவிட்டு அதன் பின்னரே விடுமுறை வழங்கப்படுவதுண்டு. இதனால் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதுண்டு. மாலை நேரங்களில் மழை காரணமாகவும் வாக்களிப்புக்கான வருகை குறைவடைவதுமுண்டு.

மக்களின் ஜனநாயக உரிமையான வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் காலை முதல் பகல் பன்னிரண்டு மணிவரை விடுமுறை வழங்கும் கோரிக்கையை மலையகத்தின் பிரதான கட்சியின் செயலாளர் என்கின்ற அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளேன்.

இந்த அனுமதி கிடைக்கும் இடத்து தோட்டத் தொழிலாளர்கள் தமது வாக்களிப்பை நிறைவு செய்துவிட்டு வேலைக்கு சமுகமளிக்க முடியும் என தமது வேண்டுகோளை அவர் முன்வைத்துள்ளார்.

 

Sat, 11/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை