கிழக்கு மாகாணத்தில் 3280 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

ஆறு பேர் உயிரிழப்பு

கிழக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அலாவுதீன்

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 3280 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் டெங்கு நோயினை முற்றாக கட்டுப்படுத்தும் வகையில் விஷேட வேலைத்திட்டமொன்று நேற்றுமுன்தினம்(23) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. சுகாதாரத்துறை உள்ளிட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விஷேட வேலைத்திட்டத்தின் மூலம் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவில் உள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் விஷேட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு சிரமதான வேலைத்திட்டத்தின் மூலம் அழித்தொழிக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பித்துள்ளதால் கிழக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்புகள் அதிகரித்துக் காணப்படுகின்றது.

குறிப்பாக மழை காலங்களில் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றன.

இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாத காலப்பகுதிக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1399 டெங்கு நோயாளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 1058 டெங்கு நோயாளர்களும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் 608 டெங்கு நோயாளர்களும், அம்பாறை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் 211 டெங்கு நோயாளர்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயின் தாக்கத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் மூவரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவரும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப் பகுதியில் ஒருவரும் என இதுவரை கிழக்கு மாகாணத்தில் ஆறு பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகார எல்லையின் கீழ் 13 பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ஐந்து சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றன.

அந்த வகையில், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட பகுதியில் 165 டெங்கு நோயாளர்களும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 160 டெங்கு நோயார்களும், திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 65 டெங்கு நோயார்களும், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவில் 60 டெங்கு நோயாளர்களும், பொத்துவில் பிரதேசத்தில் 60 டெங்கு நோயாளர்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்

Mon, 11/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை