இஸ்ரேல் - காசா இடையே 2ஆவது நாளாகவும் மோதல்

இதுவரை 19 பலஸ்தீனர்கள் பலி

இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான பதற்றம் நேற்று இரண்டாவது நாளாகவும் நீடித்தது. இஸ்ரேலின் வான் தாக்குதலில் மேலும் 6 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு காசாவில் இருந்து ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலை நோக்கி விசப்பட்டன.

காசாவை ஒட்டிய இஸ்ரேலிய எல்லைப் பகுதிகள் மற்றும் அதற்கு அப்பாலுள்ள பகுதிகளிலும் ரொக்கெட் குண்டுகள் காரணமாக நேற்று சூரியோதயத்திற்கு முன்னரே சைரன் ஒலி எழுப்பப்பட்டதோடு இஸ்ரேலியர்கள் பாதுகாப்பு முகாம்களை நோக்கி ஓட்டம்பிடித்தனர்.

எல்லையைத் தாண்டி ரொக்கெட் குண்டுகளை வீசுபவரை இலக்கு வைத்த காசாவில் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இருவர் தமது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் என்று இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

காசாவில் ஈரான் ஆதரவு இஸ்லாமிய ஜிஹாத் போராளிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்தே இந்த பதற்றம் ஏற்பட்டது. இவ்வாறு கொல்லப்பட்ட பாஹா அபூ அல் அத்தா இஸ்ரேலுக்கு எதிராக அண்மைய தாக்குதல்கள் மற்றும் எதிர்கால தாக்குதல்களுக்கு மூளையாக செயற்படுபவர் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

நேற்று இடம்பெற்ற இஸ்ரேலிய வான் தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கையாக இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இஸ்ரேலை நோக்கி சுமார் 200 ரொக்கெட் குண்டுகளை வீசியது. காசாவில் இஸ்ரேல் இரண்டு நாட்களில் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இதில் மேலும் 50 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

காசாவின் ஷிபா வைத்தியசாலைக்கு நேற்று ஆறு சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மக்கள் செறிவுகொண்ட இந்தப் பகுதியின் பொதுமக்களே அதிகம் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் தந்தை மற்றும் அவரது மகனும் இருப்பதோடு மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். “அவர்கள் தான் இதனை ஆரம்பித்தார்கள். எமக்கு போர் தேவையில்லை” என்று உறவினர் ஒருவர் அழுதபடி குறிப்பிட்டார்.

காசாவில் இஸ்லாமிய ஜிஹாத் இலக்குகள் மீதான தாக்குதல்களை நேற்று மீண்டும் ஆரம்பித்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது. இதன்போது மூன்று ரொக்கெட் விசும் தளங்கள் இலக்குவைக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் காசாவில் ஆட்சியில் உள்ள அந்தப் பகுதியில் மிகப் பெரிய போராட்டக் குழுவான ஹமாஸ் இந்த மோதல்களில் இருந்து ஒதுங்கியே உள்ளது. இந்த வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் மத்தியஸ்த முயற்சிக்காக மத்தியகிழக்கிற்கான ஐ.நா தூதுவர் எகிப்து தலைநகர் கெய்ரோவை நோக்கி விரைந்திருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பதற்ற நிலையை அதிகரிக்க இஸ்ரேல் விரும்பவில்லை என்றும் ஒரு நீண்டகால மோதலுக்கு தயாராக இருப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகும் குறிப்பிட்டுள்ளார்.

“எமது பிரஜைகளை தாக்கிவிட்டு தப்பிக்கலாம் என்று யாராவது நினைத்தால் அது தவறானதாகும்” என்று டெல் அவிவில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் நெதன்யாகு குறிப்பிட்டார்.

“தீவிரவாதிகள் எங்கு ஒளிந்திருந்தாலும் எம்மால் தாக்குதல் நடத்த முடியும் என்பதை நாம் நிரூபித்துள்ளோம். யாராவது எம்மை நோவிக்க நினைத்தால் நாம் அவர்களை நோவிப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பலஸ்தீன போராட்டக் குழுக்கள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், இஸ்ரேல் அனைத்து சிவப்பு எல்லைகளையும் மீறிவிட்டதாகவும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

அபூ அத்தாவின் இறுதிச் சடங்கின்போது ‘சியோனிச கட்டமைப்பை ஆட்டங்காணச் செய்வேம்” என்று இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் கோசம் எழுப்பினர்.

பதற்றம் காரணமாக காசாவில் பாடசாலைகள் மற்றும் பெரும்பாலான அரச அலுவலகங்கள் இரண்டாவது நாளாகவும் நேற்று மூடப்பட்டிருந்ததோடு தெற்கு இஸ்ரேலிலும் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

1967 மத்திய கிழக்கு யுத்தத்தில் காசாவை கைப்பற்றிய இஸ்ரேல் 2005 இல் அங்கிருந்து தனது துருப்புகளை வாபஸ் பெற்றது. 2007 தொடக்கம் அந்தப் பகுதி ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு இஸ்ரேலின் முற்றுகையில் இருந்து வருகிறது.

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை