ஆஸி அணிக்கெதிரான டெஸ்ட்: 240 ஓட்டங்களுக்கு சுருண்டது பாகிஸ்தான்

அவுஸ்திரேலியா - -பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதற்கமைய முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸிற்காக, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றது.

பிரிஸ்பேன் மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொண்டது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஷான் மசூத் மற்றும் அசார் அலி ஆகியோர் இணைந்து 75 ஓட்டங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

இதன்போது ஷான் மசூத் 27 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பிறகு களமிறங்கிய ஹரிஸ் சொஹைல் களத்தில் இருக்க, அசார் அலி 39 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஹரிஸ் சொஹை லும் 1 ஓட்டத்துடன் ஏமாற்ற, இதன்பிறகு களமிறங்கிய அசாட் சபீக் களத்தில் நங்கூரமிட்டார்.

அசாட் சபீக் ஒருபுறம் களத்தில் இருக்க, அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.

பாபர் அசாம் 1 ஓட்டத்துடனும், இப்தீகார் அஹமட் 7 ஓட்டங்களுடனும், மொஹமட் ரிஸ்வான் 37 ஓட்டங்களுடனும், யாசிர் ஷா 26 ஓட்டங்களுடனும், சயீன் அப்ரிடி ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

இதேவேளை, சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த அசாட் சபீக், 76 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார்.

நஷீம் ஷா 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இம்ரான் கான் ஆட்டமிழக்காது 5 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்டாக் 4 விக்கெட்டுகளையும், பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும். நாதன் லயன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். போட்டியின் இரண்டாம் நாளான, இன்று அவுஸ்திரேலியா அணி, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கவுள்ளது.

Fri, 11/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை