ஏப். 21 தாக்குதல்: சுயாதீன குழு நியமிக்க போவதாக தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சுயாதீன குழு ஒன்றை நியமித்து அதன் விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் உறுதியளித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையிலான  சந்திப்பொன்று நேற்றைய தினம் கொழும்பு பேராயர் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேராயர் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டார்.

பலியான மக்களுக்கு இதுவரை நீதி பெற்றுக் கொடுக்கப்படவில்லை. முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என பேராயர் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டினார்.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்படி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சுயாதீன குழு ஒன்றை நியமிக்க உள்ளதாகவும் அதன் விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் இடம் பெறாத வாறு தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

அத்துடன் பின்னடைவு கண்டுள்ள புலனாய்வுப் பிரிவை மீண்டும் வலுவானதாக கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளரை பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்துள்ளார்.

தாம் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களை மீண்டும் உடனடியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதிபேராயரிடம் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 11/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை