ஆஸி. - பாக். முதல் டி-20 மழையால் கைவிடப்பட்டது

அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் மோதிய முதல் டி-20 போட்டி மோசமான காலநிலை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 3 டி-20 மற்றும் 2 டெஸ்ட போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி-20 போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்து வீச்சை தெரிவுசெய்தது.

அதன் படி முதலில் பாகிஸ்தான் அணி துடுப்பாடியது, முதல் இன்னிங்சின்போது மழை குறுக்கிட்டதால் போட்டி 15 ஓவராக குறைக்கப்பட்டது.

15 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 107 ஓட்டங்கள் எடுத்தது.

பாகிஸ்தான் தரப்பில் அணித்தலைவர் பாபர் ஆசாம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 38 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி விளாசி 59 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், ரிச்சர்ட்சன் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

டி.எல்.எஸ் விதிப்படி 15 ஓவர்களில் அவுஸ்திரேலியாவுக்கு 118 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் வீசிய 2ஆவது ஓவரில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணித்தலைவர் பின்ச், இரண்டு சிக்சர், நான்கு பவுண்டரி என வான வேடிக்கை காட்டி 26 ஓட்டங்கள் விளாசினார்.

3.1 ஓவரில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்கள் எடுத்திருந்த போத மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. பின்னர், தொடர்ந்து மழை பொழிந்ததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை