சிரிய அகதி முகாமில் தாக்குதல்: 16 பேர் பலி

சிரியாவின் வடமேற்கு பிராந்தியத்தின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நிலப்பகுதியில் அரச படையினர் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குவாஹ் கிராமத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்த ஏவுகணை தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்திருப்பதாக சிரிய சிவில் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அஹமட் யர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர்களில் 10 சிறுபர்கள் மற்றும் மூன்று பெண்கள் இருப்பதாக யர்ஜி தெரிவித்துள்ளார்.

ஏவுகணையில் கொத்துக் குண்டுகள் இணைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டுப் பகுதியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிரிய சிவிவ் பாதுகாப்பு அமைப்பு ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.

வட மேற்கு சிரியாவில் இருக்கும் மற்றொரு நகரான மாரத் அல் நூமான் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சில மணி நேரத்தின் பின்னரே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரிய அமெரிக்க மருத்துவ சமூகம் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தமது மகப்பேற்று மருத்துவமனைக்கு 25 மீற்றர் அப்பால் விழுந்த இரண்டு ஏவுகணைகளால் நான்கு ஊழியர்கள் காயமடைந்ததாக தெரிவித்துள்ளது.

இத்லிப் பிராந்தியம் உட்பட சிரியாவின் வடமேற்கு முனை எட்டு ஆண்டுகளாக நீடிக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் கிளைச்சியாளர்கள் வசம் எஞ்சி இருக்கும் கடைசி பகுதியாக உள்ளது.

2015 ஆம் ஆண்டு சிரிய யுத்தத்தில் ரஷ்யா அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக இணைந்ததை அடுத்து அரச படை முன்னேற்றம் காண ஆரம்பித்தது. இதனால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கிளர்ச்சியாளர் பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 11/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை