தாய்லாந்து பிரிவினைவாதிகள் தாக்குதல்: 15 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தின் தென்பகுதி யாலா மாநிலத்தில் பிரிவினைவாதக் கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதோடு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நால்வர் காயமடைந்தனர்.

பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் அந்தத் தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வெடிகுண்டுகளையும் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் தங்களைப் பின்தொடர்ந்து வந்தால் அவர்களைத் தாமதப்படுத்தும் நோக்கில் வீதிகளில் அவர்கள் ஆணிகளையும் விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அண்மைய ஆண்டுகளில் இதுவே மிகப் பெரிய தாக்குதல் சம்பவம் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தாய்லாந்தில் மலாய் இன முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள யாலா, பட்டானி மற்றும் நரதிவாத் மாகாணங்களில் ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட பிரிவினைவாத போராட்டத்தில் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை சுமார் 7,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

1909 ஆம் ஆண்டு தாய்லாந்து இந்த மாகாணங்களை கைப்பற்றுவதற்கு முன் இந்த பகுதி சுதந்திர மலாய் முஸ்லிம் இராச்சியமாக இருந்து வந்தது. இங்கு 80 வீதமானவர்கள் முஸ்லிம்களாக இருந்தபோதும் நாட்டின் எஞ்சிய பகுதியில் பெளத்தர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

Thu, 11/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை