கஞ்சிப்பானை இம்ரானின் விளக்கமறியல் 15ஆம் திகதி வரை நீடிப்பு

பாரிய போதை பொருள் கடத்தல்காரரான கஞ்சிப்பானை இம்ரான் என அழைக்கப்படும் மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரானை தொடர்ந்தும் நவம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரட்ண நேற்று உத்தரவிட்டுள்ளார்.

வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்துக்குப் பொறுப்பான இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்களுக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் வார்த்தை துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய காரணங்களுக்காக கஞ்சிப்பானை இம்ரான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கஞ்சிப்பானை இம்ரான் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை அச்சுறுத்தும் சந்தர்ப்பத்தில் கொன்ஸ்டபிள் அந்த உரையாடல்களை ஒலிப்பதிவு செய்து வைத்துள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே தெரிவித்தனர். அந்த ஒலிப்பதிவு தற்போது பிறிதொரு

இறுவெட்டில் பதிந்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டனர்.

இதற்கமைய கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் குரல் சோதனைக்காக இந்த இறுவெட்டை அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்தனர். அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களம் வெகுவிரைவில் அதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனடிப்படையிலேயே நீதிமன்றம் கஞ்சிப்பானை இம்ரானின் விளக்கமறியலை நீடித்துள்ளது.

Sat, 11/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை