ரி-10: முதல் தடவையாக மகுடம் சூடியது மராத்தா அரேபியன்ஸ் அணி!

ரி-10 தொடரின் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, மராத்தா அரேபியன்ஸ் அணி முதல் முறையாக சம்பியன் பட்டம் வென்றது. அபுதாபியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில், மராத்தா அரேபியன்ஸ் அணியும், டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மராத்தா அரேபியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி, 10 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 87 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக அஷிப் கான் ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மராத்தா அரேபியன்ஸ் அணியின் பந்துவீச்சில், டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளையும், மிட்செல் மெக்லிகன், லசித் மாலிங்க மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, 88 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மராத்தா அரேபியன்ஸ் அணி, 7.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் மராத்தா அரேபியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.

இதில் மராத்தா அரேபியன்ஸ் அணி சார்பாக அதிகபட்ச ஓட்டமாக, சாட்விக் வோல்டன் 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில், பெட்ரியோட்ஸ் மற்றும் சாஹூர் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 26 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்ரிகள் அடங்களாக 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சாட்விக் வோல்டன் தெரிவுசெய்யப்பட்டார்.

தொடரின் நாயகனாக 371 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மராத்தா அரேபியன்ஸ் அணியின் மற்றொரு வீரரான கிறிஸ் லின் தெரிவு செய்யப்பட்டார்.

இதற்கு முன்னதாக நடைபெற்ற ரி-10 தொடரில், 2017ஆம் ஆண்டு கேரளா கிங்ஸ் அணியும். 2018ஆம் ஆண்டு நொர்தன் வோரியஸ் அணியும் சம்பியன் மகுடம் சூடியமை விசேட அம்சமாகும்.

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை