SLT Speedup சவாரி: கடற்படையின் சாமிக்க சந்துன் குமாரவுக்கு முதலிடம்

ஸ்ரீலங்கா டெலிகொம்மின் இலங்கையின் மிக நீண்டதும் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்டதுமான சைக்கிளோட்டப் போட்டி தம்புள்ளையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இலங்கை கடற்படையின் சாமிக்க சந்துன் குமார 5 நாள் பந்தயத்தில் முதலிடத்தை பெற்று 1 மில்லியன் ரூபா பரிசை வென்றார். SLT Speedup வரலாற்றில் 1ஆவது இடத்தை இரண்டு தடவைகள் வென்ற முதல் வீரராகவும் அவர் பதிவானார். இலங்கை துறைமுக அதிகாரசபையின் விரான் ரமேஷ் மற்றும் இலங்கை கடற்படையின் நிஹால் சில்வா 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களை பெற்று முறையே 500,000 ரூபா மற்றும் 300,000 ரூபா பரிசில்களை வென்றனர்.

பெண்கள் சைக்கிளோட்டப் போட்டியில் ஒட்டுமொத்த வெற்றியாளர்களாக இலங்கை இராணுவத்தின் பி.ஏ.எஸ். டில்ஹானி, இலங்கை விமானப் படையின் டினேஷா டில்ருக்சி மற்றும் இலங்கை இராணுவத்தின் யூ.என். குமாரசிங்க முதல் மூன்று இடங்களையும் பெற்று முறையே 250,000 ரூபா, 200,000 ரூபா, 125,000 பரிசில்களை வென்றனர்.

கனிஷ்ட பந்தயத்தின் வெற்றியாளர்களாக Staternil சைக்கிள் கழகத்தின் டீ.வி.கே.எச். டில்மினா, சில்வர் ஸ்டார் சைக்கிள் கழகத்தின் கே.டி. கேஷன் மதுரங்க மற்றும் களனி சைக்கிள் கழகத்தின் ஏ. தனூஷ சாரங்க முதல் மூன்று இடங்களை பெற்று பெரிசில்களை வென்றனர்.

வெற்றியாளர்களுக்கான பரிசு மற்றும் கிண்ணங்களை SLT குழும தலைவர் பீ.ஜி. குமாரசிங்க சிறிசேன, SLT தலைமை நிர்வாக அதிகாரி கித்தி பெரேரா, SLT தலைமை செயற்பாட்டு அதிகாரி பிரியன்த பெர்னாண்டஸ், SLT தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தனஞ்சய மற்றும் CFSL பிரதிநிதிகள் வழங்கி வைத்ததோடு. இந்நிகழ்வில் மேலும் பல சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் SLT ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர்.

ஆண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டி கடந்த செப்டெம்பர் 25 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமானதோடு 813 கி.மீ. தூரம் பயணித்து தம்புள்ளையில் செப்டெம்பர் 28 ஆம் திகதி முடிவுற்றது. பெண்களுக்கான போட்டி 143 கி.மீ. தூரம் கொண்டதாக கொழும்பில் இருந்து தம்புள்ளை வரை செப்டெம்பர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் இடம்பெற்றது. முதல் முறையாக இடம்பெற்ற கனிஷ்ட சைக்கிளோட்டப்போட்டி 75 கி.மீ. உள்ளடங்கியதாக தம்புள்ளையில் இருந்து கெகிராவ, ஹபரண வழியாக மீண்டும் தம்புள்ளையை அடைவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போட்டி கடந்த செப்டெம்பர் 28 ஆம் திகதி நடைபெற்றது.

இதன் ஆண்களின் சிறந்த அணிக்கான விருதை இலங்கை கடற்படை வென்றது. இலங்கை துறைமுக அதிகாரசபையின் விரான் ரமேஷ் King of the mountain ஆகவும், இலங்கை கடற்படையின் சாமிக்கர சந்துன் குமார சிறந்த Sprinter ஆகவும், இலங்கை கடற்படையின் பிரபாஷ் மதுசங்க இளம் ஓட்டுநராகவும் பட்டம் வென்று ஒவ்வொரு பிரிவிலும் 100,000 ரூபா பரிசை பெற்றனர்.

இலங்கை இராணுவம் பெண்கள் பிரிவின் சிறந்த அணியாக வெற்றி பெற்றது. இலங்கை இராணுவத்தின் பி.ஏ.எஸ். டில்ஹானி பெண்களுக்கான சிறந்த Sprinter பட்டத்தை பெற்றார். இலங்கை இராணுவத்தின் யு.என். குமாரசிங்க சிறந்த இளம் ஓட்டுநராகவும் இலங்கை இராணுவத்தின் வி.ஏ.ஏ. சந்தமினி King of the mountain பட்டத்தையும் வென்றதோடு ஒவ்வொரு பிரிவிலும் முறையே 20,000 ரூபா பரிசை தட்டிச்சென்றனர்.

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை