உயர் கல்வி மாணவர்களின் விருப்புத் தேர்வில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்

பெருந்தோட்டத்துறையில் உயர் கல்வி கற்கும் மாணவர்களது விருப்புத் தேர்வில் உடன் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று மத்திய மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் சத்தியேந்திரா தெரிவித்தார்.

கண்டி அசோக்கா வித்தியாலயத்தின் 64 ஆவது வருட பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் கலைத்துறைக்கு 60 சதவீதமும் வர்த்தகத்துறைக்கு 20 சதவீதமும் மிகுதி விஞ்ஞான துறைக்கு 20 வீதமாகவும் உள்ளது. அதாவது கலைத்துறைக்கான விருப்பத் தேர்வு 60 சதவீதமாக காணப்படுகிறது. இந்த விகிதம் மாற்றப்பட வேண்டும் அதனூடாகவே மலையகத்தில் கல்வி வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும். இது விஞ்ஞானத்துறைக்கு 35 சதவீதம் என்றும் வர்த்தகத்துறைக்கு 35 சதவீதம் என்றும் மிகுதி 30 சதவீதமே கலைத்துறைக்கும் விருப்பத் தேர்வாக அமைய வேண்டும். இத்தகைய வேறுபாட்டை உருவாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல் அறிவை வழங்கி திறனை ஏற்படுத்தி மனப்பாங்குகளில் மாற்றம் ஏற்படுவதை விடுத்து முதலில் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பின்னர் அதற்கான திறன்கனை ஏற்படுத்தி அதற்கான முறையான அறிவையும் வழங்க வேணடும். மேற்படி மாற்றங்கள் தேவையானதாகும். ஏனெனில் சேவை மனப்பாங்கு இன்றி முன்னேற முடியாது. சேவை மனப்பாங்கு வளர மனப்பாங்கு மாற்றம் தேவை. அதனை அடைவதற்கான திறமைகள் இனம் காணப்பட்டு பின்னரே அறிவு வழங்க வேண்டும். வெறுமனே அறிவை மட்டும் பெற்றவர்களால் சமூகம் முன்னேற முடியாது. இப்படியான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

அக்குறணை குறூப் நிருபர்

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை