ரயில்சேவை நேற்றும் ஸ்தம்பிதம்; பெரும் அவலத்தில் பயணிகள்

அமைச்சரவை தீர்வை ஏற்க சங்கங்கள் மறுப்பு;  போராட்டம் தொடருமென விடாப்பிடி

நியாயமான சம்பளக்  கட்டமைப்பை உருவாக்க  முடிவு ; மாற்று  நடவடிக்ைக குறித்தும்  அரசாங்கம் ஆராய்வு

ரயில்வே தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நேற்றும் (01) ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்தது. இடம்பெற்ற சில சேவைகளில் பயணிகள் பெரும் அசௌகரியத்துடனும் அவலத்துடனும் பயணித்த அதேவேளை, சில இடங்களில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதையும் காணக்கூடியதாகவிருந்தது.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் கடந்த ஒரு வாரகாலமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ள போதிலும், நேற்று அமைச்சரவையில் இதுபற்றி ஆராய்ந்து துரித தீர்வினைப் பெற்றுக்ெகாடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரயில் சேவையையும் ஆசிரியர் ​சேவையையும் ஒன்றிணைந்த சேவையாக மாற்றி, உகந்த சம்பள கட்டமைப்பொன்றை உருவாக்க அமைச்சரவை

அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை உபகுழு முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ரயில் மற்றும் நிர்வாக சேவை, ஆசிரியர் சேவை அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் ஆராய, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது.இதன் பரிந்துரைகள் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டன.

நிர்வாக சேவை அதிகாரிகள் அடங்கிய நிறைவேற்றுக் கொடுப்பனவினை சேவை மூப்பிற்கமைய 3 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வழங்க எடுக்கப்பட்டிருந்த முடிவை மாற்ற உப குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்குப் பதிலாக சேவை மூப்பு பாராது சகலருக்கும் 15 ஆயிரம் ரூபா வழங்க வேண்டு மென்ற பரிந்துரைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதேவேளை, பல்வேறு துறைகளினதும் சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை உபகுழு முன்வைத்த அமைச்சரவைப்பத்திரங்களுக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இதற்கிணங்க போராட்டங்களில் ஈடுபட்டுள்ள பல்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்டு வழமைக்குத் திரும்பும் என தாம் எதிர் பார்பபதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார

சங்கங்கள் மறுப்பு

எனினும், தாம் எதிர்பார்த்த தீர்வை அமைச்சரவை பெற்றுக்கொடுக்கத் தவறி விட்டதாகவும் அதனையடுத்து தாம் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடரப் போவதாகவும் ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்யை தினம் அமைச்சரவையில் ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்படும் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து ரயில்வே தொழிற்சங்கத்தினர் தமது போராட்டத்தைக் கைவிட்டுக் கடமைக்குத் திரும்புவார்களென அரசு தரப்பில் நம்பிக்கை வெளியிட்டுவரும் நிலையில், தாம் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லையென்று ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று தெரிவித்தன. இது தொடர்பில், தொழிற்சங்கங்களின் சார்பில் கருத்து வெளியிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் இந்திக்க தொடங்கொட கருத்து வெளியிடுகையில், தமது கோரிக்கைக்கு முழுமையான தீர்வு வழங்கப்படவில்லை என்பதால், தீர்வு கிட்டும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

ரயில்வே தொழிற்சங்கங்கள் தமது சம்பளப் பிரச்சினையை முன்வைத்துநேற்று ஆறாவது நாளாகவும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொது மக்கள் நேற்றுப் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேர்ந்தது. வார நாட்கள் என்பதால் மக்கள் தமது கடமைகளுக்கு செல்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

வேலை நிறுத்தம் தொடர்ந்தால் மாற்று நடவடிக்ைக

இதேவேளை, ரயில்வே ஊழியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சவார்த்தைகளுக்கு ஏற்ப அமைச்சரவையில் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனை ஏற்பதற்குச் சங்கங்கள் மறுக்குமாயின் அரசாங்கம் மாற்று நடவடிக்ைகயை மேற்கொள்ளுமென்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார்.

அவர்களின் கோரிக்கைக்கு இணங்க ஒரேயடியாக அவர்களுக்கு சம்பளத்தை அதிகரித்தால் நாட்டில் 5 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நேரிடும். எனினும், நாம் அவர்ளுக்கென விசேட நடைமுறையொன்றை ஏற்படுத்தவே தீர்மானித்திருந்தோம். அதனை அவர்கள் ஏற்காவிட்டில் அவர்கள் விருப்படியே போராட்டத்தைத் தொடரட்டும். அதற்காக மக்கள் பாதிப்படைய இடமளிக்க முடியாது. நாம் மாற்று வழியை ஏற்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார். நேற்றைய தினம் அமைச்சரவையில் ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக்கப்பட்டு தொழிற்சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாது போனால், எம்மால் எதுவும் செய்ய முடியாது. அத்தியாவசிய சேவையாக ரயில் சேவைகள் பிரகடனப்படுத்திய பின்னர் அவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி சம்பள முறைமையொன்றை ஏற்படுத்திக்கொள்வதே எமது நோக்கமாக இருந்தது. எனினும், அவர்கள் அதற்கு இணங்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

தொழிற்சங்கப் போராட்டம் தொடருமானால் இராணுவத்தினரை வைத்து ரயில் சேவை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறதே? என வினவிய போது:

இல்லை. அவ்வாறு எந்தத் தீர்மானமும் இல்லை. இராணுவத்தினரை வைத்து ரயில்களை செலுத்த முடியாது. அதற்கு மாற்று நடவடிக்கையொன்றை நாம் மேற்கொள்வோம்.

நேற்று முன்தினம் தொழிற்சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கிணங்க நாம் எமது செயற்பாட்டை மேற்ெகாண்டுள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை