Header Ads

வடகிழக்கு சிரியாவில் குர்திஷ்களுக்கு எதிராக துருக்கி படைகள் முன்னேற்றம்

பாதுகாப்புச் சபை, அரபு லீக் அவசரக் கூட்டம்

சிரியாவில் தாக்குதல்களை ஆரம்பித்திருக்கும் துருக்கி படை யூப்ரடிஸ் நதியின் கிழக்காக குர்திஷ் படையினருக்கு எதிராக தொடர்ந்து முன்னேறி வருகிறது.

அந்தப் பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றதை அடுத்து கடந்த புதனன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த படை நடவடிக்கை எட்டு ஆண்டுகளாக நீடிக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தின் மற்றொரு ஆபத்தாக நகர்வாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அரசு எந்த ஒப்புதலையும் அளிக்கவில்லை என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி எல்லையில் இருந்து அமெரிக்கத் துருப்புகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திரும்பப் பெற்றதை மைக் பொம்பியோ ஆதரித்து பேசினார். டிரம்பின் இந்த முடிவு அமெரிக்காவிலும், சர்வதேச அரங்கிலும் எதிர்ப்பு குரல்களை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் துருக்கி தாக்குதல் நடத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்ததாக வெளிவந்த செய்திகள் உண்மையல்ல என்று மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, வடக்கு சிரியாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஷ் படைகளோடு துருக்கி நேரடியாக மோதலைத் ஆரம்பித்தது.

குர்திஷ் படையினர் அகற்றப்பட்ட ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கி அந்த இடத்தில் துருக்கியில் உள்ள 36 இலட்சம் சிரிய அகதிகளை குடியமர்த்த வேண்டும் என்று துருக்கி திட்டமிட்டுள்ளது.

சிரியாவில் உள்ள ஜிஹாத் குழுவான ஐ.எஸ். படைகளை முறியடிப்பதில் அங்குள்ள குர்திஷ் ஆயுதப் படையான சிரிய ஜனநாயகப் படை அமெரிக்காவின் கூட்டாளியாக செயல்பட்டது. ஆனால், சிக்கலான நேரத்தில் எல்லைப் புறத்தில் இருந்து அமெரிக்கத் துருப்புகள் பின்வாங்கியதை முதுகில் குத்தும் செயலாக சிரியா ஜனநாயகப் படை கருதுகிறது.

இந்த தாக்குதல் ஆரம்பிப்பதற்கு முன்பாக சிரியாவில் இருந்து அமெரிக்கத் துருப்புகளை சர்ச்சைக்குரிய முறையில் திரும்பப் பெற்றார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.

அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியிலும் இந்த அணுகு முறைக்கு கண்டனங்கள் எழுந்தன. ஆனால், மனிதத் தன்மையற்ற எதையாவது துருக்கி செய்தால், எல்லை மீறி சிரியாவுக்குள் நுழைந்தால் அதன் பொருளாதாரம் அழிக்கப்படும் என்று கூறி டிரம்ப் விமர்சகர்களுக்குப் பதில் அளித்தார்.

ஐ.எஸ் படையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ஆயிரக் கணக்கில் சிரியாவின் சிறைகளில் உள்ளனர். அந்த சிறைகளை குர்திஷ் ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படை காத்து வருகிறது. தாக்குதல் ஆரம்பித்ததாக துருக்கி அறிவித்துள்ள நிலையில் அந்த சிறைவாசிகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. எனினும் இந்த சிறையில் இருந்த இரண்டு பிரிட்டன் நாட்டு ஐ.எஸ் கைதிகளை அமெரிக்க இராணுவம் அழைத்துச் சென்றுள்ளது. இந்த இருவரும் 30 மேற்கத்தேய பணயக் கைதிகளை துன்புறுத்தியது மற்றும் கொலை செய்ததில் தொடர்புபட்டவர்களாவர்.

எல் ஷபீ எல்ஷெய்க் மற்றும் அலெக்சாண்டா கொட்டே என்ற இருவருமே அமெரிக்க இராணுவம் தமது தடுப்புக்காவலுக்கு அழைத்துச் சென்றுள்ளது.

இந்நிலையில் துருக்கி எல்லையில் இருந்து சிரியாவின் தால் அப்யாத்தை நோக்கி ரொக்கட் தாக்குதல் இடம்பெற்று வருவதாக துருக்கி எல்லை நகரான அக்காகலில் இருந்து பார்த்தவர் ஒருவர் ரோய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். எல்லையில் சிரியா பக்கமாக இரண்டு இலக்குகளில் இருந்து கரும்புகை வெளிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுக் காலை துருக்கிப் படையினர் ரா அல் ஐனன்னுக்கு அருகில் ஷெல் வீச்சுகளை நடத்தியதாகவும் குர்திஷ் போராளிகள் அதற்கு பதில் தாக்குதல் நடத்தியதாகவும் பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.

வடகிழக்கு சிரியாவில் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் துருக்கி இராணுவம் குர்திஷ் போராளிகளின் 181 இலக்குகள் மீது வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தியதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐ.எஸ் குழு உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளில் ஒன்றும் துருக்கியின் வான் தாக்குதலுக்கு இலக்கானதாக குர்திஷ்கள் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

துருக்கி துருப்புகள் நான்கு பகுதிகளால் சிரியாவுக்குள் ஊடுருவியுள்ளனர். இதில் டால் அப்யாத் நருக்கு அருகால் இரண்டு பக்கங்களாலும் ராஸ் அல் ஐனுக்கு அருகால் இரண்டு பக்கங்களாலும் துருக்கி படை முன்னேறி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வான் தாக்குதல்களில் ஐந்து பொதுமக்கள் மற்றும் மூன்று போராளிகள் கொல்லப்பட்டு மேலும் பல பொது மக்கள் காயடைந்திருப்பதாக சிரிய ஜனநாயகப் படை குறிப்பிட்டுள்ளது. ராஸ் அல் ஐனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஹசக்கா மாகாணத்தை நோக்கி வெளியேறி இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

தால் அப்யாத்தில் துருக்கி துருப்புகளின் தரைவழி தாக்குதலை போராளிகள் முறியடித்ததாக சிரிய ஜனநாயகப் படை பேச்சாளர் முஸ்தபா பாலி குறிப்பிட்டுள்ளார். எனினும் துருக்கியின் இந்த தாக்குதல் மோசமான திட்டம் என்று டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். துருக்கி கூறியதுபோல் பொதுமக்கள், மத சிறுபான்மையினரை பாதுகாத்து மனிதாபிமான நெருக்கடி ஒன்றை தவிர்க்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தப் பிரச்சினை குறித்து பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் போலந்து ஆகிய ஐந்து ஐரோப்பிய நாடுகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஐ.நா பாதுகாப்புச் சபை நேற்று அவசரமாகக் கூடி பேச்சுவார்த்தை நடத்தியது.

இது தொடர்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தப்போவதாக 22 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட அரபு லீக் அறிவித்துள்ளது.

சிரியாவின் குர்திஷ் வை.பீ.ஜி போராளிகளை துருக்கி தீவிரவாதிகளாக கருதுகிறது. இவர்களே சிரிய ஜனநாயக படையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். துருக்கியில் சுயாட்சி கோரி பல தசாப்தங்களாக போராடி வரும் தடை செய்யப்பட்ட குர்திஷ் தொழிலாளர் கட்சியுடன் தொடர்புபட்டவர்களாகவே வை.பீ.ஜி போராளிகளை துருக்கி கருதுகிறது.

எனினும் வடக்கு சிரியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் துருக்கி மேற்கொள்ளும் மூன்றாவது இராணுவ நடவடிக்கை இதுவாகும். இதில் அரபு மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தால் அப்யாத் மற்றும் ராஸ் ஐனுக்கு இடைப்பட்ட 100 கிலோமீற்றர் பகுதியை துருக்கி இலக்கு வைத்துள்ளது.

துருக்கி தனது சிரிய பக்கமான எல்லையில் 480 கிலோமீற்றர் நீண்ட 32 கிலோமீற்ற தூரத்திற்கு பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைப்பதற்கே திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“குர்திஷ் போராளிகள் ஒன்று எம் பக்க வர வேண்டும் இல்லையெனில் ஐ.எஸ் குழுவுக்கு எதிரான எமது நடவடிக்கைக்கு தடங்கலை ஏற்படுத்தும் அவர்களை நாம் நிறுத்துவோம்’ என்று துருக்கி ஜனாதிபதியின் தொடர்பாடல் பணிப்பாளர் பஹ்ரத்தீன் அல்துன் குறிப்பிட்டார்.

அமெரிக்க துருப்புகள் ஏற்கனவே நான்கு எல்லை நிலைகளில் இருந்து வாபஸ் பெற்றுள்ளபோதும் தொலைதூர கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து இன்னும் அந்தப் படை வாபஸ் பெறவில்லை.

எல்லை பகுதிகள் மனிதாபிமான பேரழிவு ஒன்றை எதிர்கொண்டிருப்பதாக குர்திஷ்கள் தலைமையிலான சிரிய ஜனநாயக படை எச்சரித்துள்ளது. “இந்த தாக்குதலால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரத்தம் சிந்தப்படுவார்கள்” என்று சிரிய ஜனநாயகப் படையில் பொது கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது.

Fri, 10/11/2019 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.