சஜித்தின் வாக்குறுதிகள் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தும்

பெருந்தோட்டத்துறை மறுசீரமைக்கப்பட்டு, தோட்டத் தொழிலாளர்கள், சிறு தோட்ட உடமையாளராக மாற்றப்படுவார்கள். மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர் தொடர்பாக விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும் என்ற இரண்டு பிரதான யோசனைகளை எங்கள் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளமை இந் நாட்டு தோட்டத் தொழிலாளர் வாழ்வில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த அடித்தளம் இட்டுள்ளது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இரத்தினபுரி, ருவன்வெல்ல பிரதேசங்களில் இடம்பெற்ற பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் இங்கு உரையாற்றுகையில்,

இது தூர நோக்குடன் தொழிலாளர்களின் வாழ்வை அடியோடு மாற்றி இந் நாட்டின் முழுமையான பிரஜைகளாக மலையக மக்களை மாற்றும் நோக்கங்களை கொண்டவையாகும். ஆரம்பத்திலிருந்து தொடரும் தொழிலாளர்கள் என்ற அடையாளம் மாறி புதிய கிராமத்தவர் என்ற அடையாளம் உருவாகும். எமது அரசின் அடுத்தகட்ட பயணம் நவம்பர் பதினெட்டாம் திகதி ஜனாதிபதி சஜித் தலைமையில் ஆரம்பமாகும். அதையடுத்து, இந்த உறுதிமொழிகள் நடைமுறையாகும். அதை நாம் கண்காணித்து நடைமுறையாக்குவோம்.

அத்துடன் இன்னொரு விடயமும் இங்கே நடக்கின்றது. நுவரேலியா மாவட்டத்துக்கு வெளியே இரத்தினபுரி, கேகாலை மாவட்ட கூட்டங்களுக்கு வழமையாக, ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட பெரும்பான்மை கட்சி அமைப்பாளர்களால், நமது மக்கள் "கூட்டம் காட்ட" மாத்திரம் அழைத்து வரப்படுகிறார்கள்.

அதை மாற்றி இம்மாவட்ட தமிழ் மக்களை நாம் இன்று அரங்கத்துக்கு கொண்டு வந்துள்ளோம். தேர்தல்களில் தமது வாக்கை அள்ளி அளித்தாலும், தேசிய அரங்கிலிருந்து, ஒளித்து வைக்கப்பட்டிருந்த, இரத்தினபுரி, கேகாலை மாவட்ட தமிழ் வாக்காளர்களை இப்போது வெளிச்சத்துக்கு நாம் கொண்டு வந்துள்ளோம்.

எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசவை அழைத்து வந்து, அவரை இம் மாவட்ட தமிழ் மக்களை நேரடியாக சந்திக்க செய்து, உங்கள் வெற்றியில் "நாங்களும் பங்காளிகள்" என இம் மாவட்ட தமிழ் மக்களின் இருப்பை சஜித்துக்கு உணர்த்தியுள்ளோம் என்றார்.

Fri, 10/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை