இனவாதத்தை புறக்கணிப்பதே எமது அரசியல் பயணம்

இந்த நாட்டில் இனவாதத்தை புறக்கணிப்பதே எமது அரசியல் பயணத்தின் பாதையாக அமைகிறது. எந்த வகையான இனவாதத்திற்கும் நாம் இடமளிக்க கூடாது. ஆனால் இனவாதம் நாட்டில் அரசியலாகமாறியுள்ளது. எங்கள் நாட்டில் இந்த இனவாதமே யுத்தத்தையும் உருவாக்கியது என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

'வீழ்ச்சியடைந்த தேசத்தைக் கட்டியெழுப்புவோம் நாம்' எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் யாழ். ரிம்பர் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,....

வடக்கிலும் தெற்கிலும் குழந்தைகளை யுத்தத்திற்கு காவு கொடுத்தோம்.ஆனால் இந்த முப்பது வருட யுத்தத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்த அல்லது செய்யும் எந்த ஒரு உறுப்பினரின் குழந்தைகள் யாரும் இறந்ததில்லை. ஆனால் வடக்கிலும் தெற்கிலும் இனவாதத்தை தூண்டியது யார் என்றால், அரசியல் வாதிகள் தான். வடக்கு கிழக்கிலும் தெற்கிலும் சாதாரண தாய் தந்தையரின் குழந்தைகள் மீண்டும் ஒரு தடவை இனவாதத்திற்கோ அடிப்படை வாதத்திற்கோ இடமளிக்க கூடாது.

இனவாதத்திற்கு எதிரான தேசிய அரசியல் ஒற்றுமை எம்மிடம் உள்ளது. அந்த ஒற்றுமையை எவ்வாறு உருவாக்கலாம் அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று பார்க்க வேண்டும். இந்த நாட்டில் எந்த ஒரு குடி மகனையும் இரண்டாம் நிலைக் குடிமகனாக மாற்ற முடியாது. நான் அண்மையில் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனைச் சந்தித்தேன். அவர் என்னிடம் இலங்கை குடிமகன் என்று சொல்ல எனக்கு விருப்பம். ஆனால் இலங்கையில் இரண்டாம் நிலைக் குடிமகனாக என்னைச் சொல்லிக் கொள்ள விருப்பமில்லை என கூறியிருந்தார்.

நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் நாட்டில் முதலாம் நிலை இரண்டாம் நிலைக் குடிமக்கள் என இருக்க கூடாது. நாம் பேசுகின்ற மொழி, கலாசாரம் ரீதியில் வித்தியாசம் இருக்க கூடாது. கொள்கை அடிப்படையில் ஒரு மித்த செயற்பாடு வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவரும் இந்த நாட்டில் சமமாக மதிக்கப்பட வேண்டும்.

நாங்கள் சட்டம் உருவாக்குவதே அனைவருக்கும் தான். மதம் என்பது உங்கள் நம்பிக்கை. உயர்வு, தாழ்வு என்று கருதுவதை இல்லாமல் ஒழிக்க வேண்டும். அதை அரசியலமைப்பிலும் சட்டத்திலும் கூட சாதாரண மக்களுக்கு அப்படியான சட்டக் கோவையை நாம் பெற்றுத் தருவோம். எந்தவொரு வகையிலும் வித்தியாசமாக நடாத்தப்படாத ஏற்றத் தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒரு சகோரர்கள். நாம் இந்த நாட்டின் பிரஜைகள். இந்த நாட்டில் பிறந்த இந்த நாட்டிலே இறக்கின்றோம். எங்களிடையே வேறு என்ன வித்தியாசம். எந்தவொரு வித்தியாசத்திற்கும் இடமளிக்காத எல்லா வித்தியாசங்களையும் புறக்கணிக்கின்ற ஒரு சமுதாயத்தை நாம் உருவாக்குவோம். உங்கள் கையில் இருக்கும் அரசியல் பலத்தை பயன்படுத்த வேண்டும்.

அரசியல் பலத்தில் இருந்து யாரும் தனிமைப்படுத்தப்படக் கூடிய, ஆட்சி உருவாக்க கூடாது. ஆனால் எம்மால் உருவாகும் ஆட்சியானது தமிழ், சிங்களம், முஸ்லிம், வடக்கு, கிழக்கு, தெற்கு என வித்தியாசம் இல்லாமல் அரசியல் பலத்தின் சம உறுப்பினர்களாக மாறுகின்ற மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Fri, 10/04/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக