கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வசதிகளை கண்டியிலும் பெறவே ஏற்பாடு

தேசிய சுகாதார சேவையை பொதுமக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் நோக்கிலேயே கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள பல வசதிகள் கண்டி தேசியவைத்தியசாலையிலும் பெற்றுக்கொள்ளமுடியும். அரசாங்கத்தின் உரிய சிபாரிசுகளின் அடிப்படையில் கண்டி போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.

160 ஆண்டுகள் வரலாறு கொண்ட கண்டி போதனா வைத்தியசாலை நேற்று (30) முதல் கண்டி தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தும் தேசிய நிகழ்வு சுகாதார அமைச்சர் தலைமையில் வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கண்டி தேசிய வைத்தியசாலைக்கு சொந்தமான 58 ஏக்கர் காணியில் 25 ஏக்கர் பொதுமக்களின் அத்துமீறல் காரணமாக சுவீகரிக்கப்பட்டுள்ளது.

இதனை சட்டரீதியாக மீண்டும் வைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறு வைத்தியசாலைக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக குடியிருப்போர்களுக்கு மாற்று வழியாக கண்டி ஹந்தானைப்பகுதியில் காணிகளை வழங்குவதற்கு நானும், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும் இணைந்து செயல்பட்டு வருகின்றோம்.

தற்போது நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் சகலவளங்களையும் கொண்டுள்ளது.

எதிர்காலத்தில் சர்வதேச தரத்திலான தொழில் நுட்பவகையில் பல முன்னோடி பணிகளை ஆரம்பித்து நாட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க நாம் நடவடிக்கைள் எடுத்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது (1947) கண்டி முஸ்லிம் ஹோட்டல் ஸ்தாபகர் மீராசாகிய ஹாஜியாரினால் கண்டி தேசிய வைத்திசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள ஒரு ஏக்கர் காணியின் உறுதிப்பத்திரம் உத்தியோகபூர்வமாக அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் உரியவரினால் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, லக்கி ஜயவர்த்தன, மத்தியமாகாண ஆளுநர் ரஜித்த கீர்த்தி தென்னகோன், கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் சமன் ரட்னாயக்க, பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் உபுல்திசாநாயக்க, வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

(எம்.ஏ .அமீனுல்லா)

Thu, 10/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை