தன்மானமுள்ள எந்த தமிழ் மகனும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டான்

முன்னாள் பிரதி அமைச்சர்  சோ.கணேசமூர்த்தி

மண்டூர் குறூப் நிருபர்

எந்த தன்மானமுள்ள தமிழ் மக்களும் தங்களுடைய வாக்குகளை கோட்டாபயவுக்கு அளிக்கமாட்டார்கள் என்பதை பொதுஜன பெரமுன அணியினர் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும் என, முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

கல்முனை மட்டு வீதியில், புதிய ஜனநாயக முன்னணியின் களுவாஞ்சிக்குடி, பட்டிருப்புத் தொகுதி தேர்தல் அலுவலகம் நேற்றுமுன்தினம் (26) திறந்து வைக்கப்பட்டது. அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

யுத்தகளத்தில் தமிழ் மக்கள், இளைஞர், யுவதிகள், பாலகர்கள், முதியோர்கள் என எல்லோரும் துடி துடிக்க இறந்தார்கள். எங்களுடைய ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்களை கொன்று குவித்ததுக்கு காரணமாயிருந்த, எங்கள் இனத்தை அழித்த ஒருவன், எங்களுக்கு முன் வாக்குக் கேட்க வருவதென்பது வெட்கப்படக்கூடியதும் கேவலமானதுமான விடயம். போர்க்களத்தில் தமிழ் இனம் அழிய தூபமிட்டவர்களுக்கு தமிழர்கள் வாக்களிப்பதென்பது சாத்தியமற்ற காரியம் என்பதை கோட்டாபய உணர வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பதவியேற்றதன் பிற்பாடு சகல ஆணைக்குழுக்களும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் , சுயாதீனமாகவும் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அவ்வகையில் இந்த நடுநிலையான ஆட்சியை நாங்கள் தொடர்ந்து தக்க வைக்க வேண்டுமா ? மாறாக மனித உரிமை மீறல் இடம்பெற்ற, வெள்ளை வான்கள், கப்பம், கடத்தல் கலாசாரம் அரங்கேறிய சர்வாதிகார குடும்ப ஆட்சியாளர்களுக்கு கையளிக்க வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

காணிகளை விடுவித்திருக்கின்றோம், யுத்தக் கைதிகளாக்கப்பட்டவர்களை விடுவித்திருக்கின்றோம், காணாமலாக்கப்பட்டவர்களுக்கான ஆணைக்குழுவினை நிறுவியுள்ளோம், மனித உரிமை ஆணைக்குழுவினால் கொண்டுவரப்பட்ட கூட்டுமுயற்சி பிரேரணையினை ஆதரித்தமை உட்பட பல்வேறுபட்ட செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

கிட்டத்தட்ட எழுபது வருட காலமாக தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினையினை பெற்றுக்கொடுப்பதற்கு, கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒரே நோக்குடனே செயற்பட்டு வருகின்றனர்.

வீடில்லாத மக்களுக்கு வீடு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக 37 ஆவது ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில், 1987 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாஸ வீடற்ற மக்களுக்கு வீடு வழங்கப்பட வேண்டும், வீடற்றோர் தினத்தை ஒரு தினமாக பிரகடனப்படுத்துமாறு ஐ.நா சபையில் கூறியதற்கிணங்க பிரகடனப்படுத்தப்பட்டிருந்து.

கிராம மக்கள் பல்வேறு துறைகளில் எழுச்சியடைவதற்காக கம்முதாவ திட்டத்தை முதன்முதல் அமுல்படுத்தி அபிவிருத்தி மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். வீடமைப்புத் துறையில் சகல ஏழைகளுக்கும் காணிகள், வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று மாபெரும் வீடமைப்புத் திட்டத்தினை அறிமுகப்படுத்தினார். அப்படிப்பட்ட சிறந்த அரசியல் தலைவருடைய புதல்வர்தான் சஜித் பிரேமதாச. அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற தன்னுடைய மாத சம்பளம், சலுகைகள் மற்றும் வாகனம் கூட பெற்றுக்கொள்ள விரும்பாத மிகவும் எளிமையான போக்குடையவர். மக்களோடு மக்களாக இணைந்து செயற்படக்கூடியவர். அவ்வாறனவரையே சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் விரும்புகின்றனர்.

கிழக்கு மாகாணத்தினுடைய தலைவிதியை கிழக்கு தமிழ்மக்களே தீர்மானிக்க வேண்டும், தமிழர் தரப்பிலிருந்து தமிழ்த் தேசியக் கட்சிகளிலிருந்து கூடுதலான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படும்போது கிழக்குக்கு தமிழ் முதலமைச்சரே வர முடியும். கோட்டாபயவினை ஆதரிக்கும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் ஆகியோர் பொய்யான போலியான பிரசாரங்களை முன்னெடுத்து கோட்டாபயவின் கூலிப்படைகளாகவே தொழிற்படுகின்றார்கள்.

தமிழ் இளைஞர், யுவதிகள் மானபங்கப்படுத்தப்பட்டு துடி துடிக்க கொலை செய்யப்பட்ட சர்வாதிகார யுகத்தினை, மீளவும் கொண்டு வர பிள்ளையானும் கருணாவும் முயற்சிக்கின்றார்கள். உலகத்திலே இடம்பெறாத மனித உரிமை மீறலை, தமிழ் இனத்தை அழித்து மக்களை துன்ப துயரத்திற்குள் உள்ளாக்கிய கொடூரமானவருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதென்பது தற்கொலை்செய்துகொள்வதற்கு ஒப்பாகும். பத்திரிகையாசிரியர்களும் மக்களும் சுதந்திரமாக நடமாட வேண்டுமாயின் கடத்தி கொலை செய்தவர்களுக்கு வாக்களிப்பதை விடுத்து, தன்மானம் மிக்க மட்டு. பட்டிருப்புத் தொகுதி மக்கள் நூற்றுக்கு நூறு வீதம் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்பவர்களாக இருக்க வேண்டும் என்றார்.

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை