பதிலளிக்க முடியாமல் தடுமாறிய கோட்டாபய

வரி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி

வாக்குறுதியளித்ததன்படி வரிகளை நீக்கினால் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லமுடியுமென ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்றும் தடுமாற்றம் அடைந்தார்.  

தேர்தல் வாக்குறுதிக்கமைய ‘வற்’ வரியை குறைத்தும் ஏனைய வரிகளை நீக்குவதுமாக இருந்தால் அதன் மூலம் வருடாந்தம் இழக்கப்படும் 350பில்லியன் ரூபாவை எவ்வாறு ஈடுசெய்யப் போகின்றாரென பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் விளக்கமளிக்க வேண்டுமென நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சவால் விடுத்திருந்தார்.  

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க வைச் சேர்ந்த விஜயதாச ராஜபக்ஷ எம்.பி பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவை ஆதரிப்பதாக அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.  

இதன்போது நிதியமைச்சர் விடுத்துள்ள சவால் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய பதிலளிக்க முடியாமல் தடுமாறினார்.  

அதற்கு அவர் இக்கேள்விக்கான பதிலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறியதாக தெரிவித்தார்.  

அதனைத் தொடர்ந்து அவர் பதிலை மாற்றி கடந்த அரசாங்கத்தில் தான் பாதுகாப்புக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டதற்கமைய தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய நேரத்தில் தைரியமான தீர்மானத்தை மேற்கொண்டதன் காரணமாகவே எல்.ரீ.ரீ.ஈயினரை தோற்கடிப்பதற்காக மும்மடங்கு படைவீரர்களை உள்வாங்கியதாக ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்தார்.  

படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நாம் பாரிய தொகை நிதியை செலவழித்தோம். அரசாங்கம் கவிழ்ந்துவிடும் பொருளாதாரம் வீழ்ச்சிக் கண்டுவிடும் என்ற அச்சத்தில் எவரும் எடுக்காத தீர்மானத்தை நான் தைரியமாக மேற்கொண்டதன் காரணமாகவே நீண்டகாலமாக இழுபட்டு வந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது. எவ்வாறாயினும் எமது இலக்குகளை அடைவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தைரியமான முடிவுகளை எடுத்தார்.

மீண்டும் அதே கேள்வியை நினைவுபடுத்திய கோட்டாபய ராஜபக்ஷ, வெளிநாட்டு ஆலோசகர்களுக்கு ஏற்ற மாதிரி நாட்டின் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்த முடியாது. அது வெளிநாடுகளுக்கே பொருந்தும். உள்நாட்டின் பொருளாதாரம் பற்றி புரிந்துணர்வு கொண்டவர்களால் மட்டுமே எமது நாடு தொடர்பில் சரியான தீர்மானங்களை மேற்கொள்ள முடியுமென்றும் அவர் கூறினார்.   வரிகள் நீக்கபடுமாயின் எவ்வாறு வரவு செலவுத் திட்டத்தில் உருவாகக்கூடிய துண்டுவிழும் தொகையை சரி செய்வீர்களென ஊடகவியலாளர் ஒருவர் மீண்டும் கேள்வி எழுப்பியபோது குறுக்கிட்ட பந்துல குணவர்தன எம்.பி அது தொடர்பான விளக்கத்தை நாம் பின்னர் தருவோம் என்றார்.    ஆனாலும் அந்த ஊடகவியலாளர் பதில் கிடைக்கும் வரை அதே கேள்வியை தொடர்ந்தும் கேட்டுக்கொண்டேயிருந்தார்.  

அந்த கேள்விக்கான பதிலை நான வழங்கியுள்ளேன்.அது தான் என்னுடைய வேலை, நான் அதை நிறைவேற்றுவேன்,என்றும் ராஜபக்ஷ பதிலளித்தார்.  

 

Sat, 10/19/2019 - 09:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை