தமிழ் மக்களுக்கு எதை சொல்வதென கூட்டமைப்பினர் பரிதவிப்பு

கிழக்குத் தமிழர் ஒன்றிய தலைவர் சிவநாதன்

தமிழ்த் தலைமைகள் குழப்பகரமான நிலையிலிருப்பதனால் இவர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று இற்றைவரை உறுதியாக கூறாது மெளனம் சாதித்துக்கொண்டிருக்கின்றார்கள். அதனாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதை தமிழ் மக்களுக்கு சொல்வதென்று புரியாத நிலையில் பரிதவிக்கின்றனர் என கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி த.சிவநாதன் தெரிவித்தார்.

கல்லடி கிறீன் கார்டன் ஹோட்டலில் நேற்று(06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்றம் அனுப்பியும் இற்றைவரை எதையும் செய்ய முடியாமைக்கு நியாயமான காரணங்கள் இன்றி, தமிழ்மக்களிடம் எவ்வாறு முகம் கொடுப்பது என்ற நிலையிலேயே கூட்டமைப்பினர் இருந்து வருகின்றனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் அரசினால் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று சிறுபிள்ளைத்தனமாக கூறுவதெல்லாம் தலைமையின் தலைமைத்துவமின்மையினை காட்டுகின்றது.

எங்களுடைய உரிமை சார்ந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் தெற்கு சிங்கள மக்கள் மத்தியிலே எங்களது நியாயமான பிரச்சினைகள் விளங்கப்படுத்தப்பட்டு அவர்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரத்தில் தன்னைக்கேட்காது தரமுயர்த்தப்படுமாக இருந்தால் இனங்களுக்கிடையே பாரிய இனமுறுகல் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதென சகோதர இனத்தைச் சேர்ந்த ஒருவர் மிகவும் பாடுபடுகின்றார்.

தமிழ்மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர்களை பாராளுமன்றம் அனுப்பியதற்கு தமிழ் மக்களின் அபிவிருத்தி அடிப்படை சார்ந்த விடயங்களைக்கூட அவர்களால் தீர்த்து வைக்க முடியவில்லை. ஆகவே இனிவரும் காலங்களில் தமிழ்மக்கள் எந்த தேர்தலாக இருந்தாலும் கூட்டமைப்பு கையை நீட்டுவதற்கு கண்மூடிக்கொண்டு வாக்களிக்காது, சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய எந்த வேட்பாளர் வருகின்றாரோ எவர் வெற்றி பெறுகிறாரோ அவரை தமிழ்மக்கள் இனங்கண்டு அவரை ஆதரிப்பதன் மூலம் எங்களுக்குரிய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம். கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் செயற்பாடு அவசியம் என்பதை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா உணர்ந்திருக்கிறார் என்பது ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

 

மண்டூர் குறூப் நிருபர்

Tue, 10/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை