இரு சிறுவர்கள் உட்பட மூவர் பலி

குடியிருப்பில் மரம் விழுந்து

வெலிமடையில் பரிதாபம்

வெலிமட பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடியிருப்பொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் ஒரு பெண்ணும் இரண்டு சிறுவர்களுமே உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஜி. சுரஞ்சனி (19), எம். இராமகிருஷ்ணா(13) மற்றும் சுப்புன் குமார (10)

என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை காயமடைந்துள்ள நபர் எம்.மகேந்திரன் (15) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெலிமட நகரிலுள்ள வெலிமட பிரதேச சபைக்குச் சொந்தமான பழைய கட்டட வளாகத்துக்கு சொந்தமாக காணியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத குடியிருப்பின் மீது நேற்று முன்தினம் இரவு (12) 9.30 மணியளவில் மரம் முறிந்து விழுந்ததிலேயே இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரம் மற்றும் வீட்டின் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கிடந்த நால்வரையும் அயலவர்களும் பொலிஸாரும் கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் மீட்டுள்ளனர். இதன்போதே இரண்டு சிறுவர்களும் உயிரிழந்திருந்தனர். உயிருக்காக போராடிக் கொண்டிருந்த பெண்ணை பொலிஸார் வெலிமட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற வேளை சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்னரே அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகேந்திரன் தெரிவிக்கையில், சம்பவத்தில் உயிரிழந்துள்ள பெண் தனது மனைவியென்றும் ஏனைய இரண்டு சிறுவர்களும் அன்று இரவு வீட்டில் உறங்குவதற்காக வந்த உறவினர்களென்றும் கூறினார்.

"இரவு உணவு உண்ட பின்னர் உறங்கச் சென்றோம். அச்சந்தர்ப்பத்திலேயே எமது வீட்டின் முன்னால் நின்ற பெரிய மரத்தின் கிளை எமது வீட்டின் மேல் முறிந்து விழுந்தது. நான் ஒரு தொழிலாளி. இங்கு என்னைப்போலவே பல தொழிலாளிகளும் பிற இடங்களிலிருந்து வந்து குடியேறியவர்களும் உள்ளனர். இங்கு 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றோம். இந்த இடத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக ஏற்கனவே எமக்கு தெரிவித்தனர்," என்றும் மகேந்திரன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் வெலிமட பிரதேசசபை தலைவர் எஸ்.ஆர் பந்துசேன, இக்காணியில் வசிப்போருக்கு மாற்றிடம் வழங்க தயாராக உள்ளபோதும் அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் இவர்களை அங்கு குடியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாகவே இப்பிரச்சினை இன்னும் தீர்வுக காணப்பட முடியாமல் இழுபறியில் உள்ளதாகவும் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன்

Mon, 10/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை