பாரிய இராணுவ அணிவகுப்புடன் சீன தேசிய தினக் கொண்டாட்டம்

சீனாவில் கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்து 70 ஆவது ஆண்டு நிறைவு விழா பாரிய இராணுவ அணிவகுப்புகளுடன் நேற்று கொண்டாடப்பட்டது.

சீனாவின் வளர்ந்துவரும் சக்தியை வெளிக்காட்டும் வகையில் இந்த இராணுவ அணிவகுப்புகள் இடம்பெற்றன. விழா ஆரம்பித்ததும் 70 துப்பாக்கி குண்டுகள் முழங்க, 5 நட்சத்திரத்துடன் கூடிய செந்நிற சீன கொடி, கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்டு, சீன கீதம் பாடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சீன புரட்சியின் போது, உயிர் நீத்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்புரையாற்றிய சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், சீனாவில் வசிக்கும் பலதரப்பட்ட மக்களுக்கும் தேசிய தின வாழ்த்துக்களை கூறினார்.

ஜனாதிபதியின் உரையை அடுத்து, பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இரு பிரிவுகளாக சுமார் 80 நிமிடங்கள் நடந்த கண்கவர் இராணுவ அணிவகுப்பை அதிகமானோர் கண்டு களித்தனர்.

சீனாவின் மாபெரும் தலைவராக கருதப்படும் மா சேதுங் 70 ஆண்டுகளுக்கு முன்னர் நவீன சீனா உருவாவதாக அறிவித்த நாளான ஒக்டோபர் 1 ஆம் திகதி அந்நாட்டில் முக்கிய தினமாக கருதப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, “சேர்மன்“ மா சேதுங் தலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் உள்நாட்டுப் போரில் வெற்றிபெற்ற பின்னர் இந்த அறிவிப்பு வந்தது.

உலக அளவில் அதிகாரமிக்கதாக சீனா உருவாகியுள்ள நிலையில், மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படும் தேசிய விழா இதுவாகும்.

10 ஆண்டுகளுக்கு முன்னால், பொருட்களின் உற்பத்தியில் உலகில் பெரிய நாடாக சீனா விளங்கியது. அமெரிக்காவுக்கு கிட்டத்தட்ட இணையாக உலகில் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இப்போது உருவாகியுள்ளது.

முன்னதாக சீனாவின் தேசிய தினம் ஹொங்கொங்கிலும் கொண்டாடப்பட்டது. ஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதை அடுத்து, பலத்த பாதுகாப்புடன் நேற்று அதிகாலை மூடப்பட்ட உள்ளரங்கில் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் சீனக்கொடியுடன் தேசிய தினத்தை கொண்டாடினர். தொடர் போராட்ட எச்சரிக்கையை அடுத்து, ஹொங்கொங் முழுவதும் பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளது.

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை