ஆலயத்தில் நீதிமன்ற தீர்ப்பை மீறியோர் மீது நடவடிக்கை வேண்டும்

நீராவியடிப்பிள்ளையார் விவகாரம்; சபையில் விசேட கவனயீர்ப்பு

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் நீதிமன்றத் தீர்ப்பை மீறி பௌத்த பிக்கு ஒருவரின் இறுதிக்கிரியைகளை மேற்கொண்டமை தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பில், சம்பந்தன் எம்.பி., 27/2ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கிணங்க நேற்று சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இதன்போது நீதிமன்ற தீர்ப்பை மீறி செயற்பட்ட அதிகாரிகள் மற்றும் சட்டம்,- ஒழுங்கை நிலைநாட்ட தவறியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். கொழும்பில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்து நீதிமன்ற தீர்ப்பை மீறி தன்னிச்சையாக செயற்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

மேற்படி விவகாரம் காரணமாகப் பொது மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சம்பந்தன் எம்பி, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்:

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி இந்து ஆலயம் மிகவும் பழமையானது. எனினும் பௌத்த தேரர் ஒருவரால் அப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு இந்துக்கள் கோவிலுக்கு செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

அங்கு விகாரை கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் அதனை நிறுத்துவதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பௌத்த பிக்கு மரணமடைந்ததால் அவரது பூதவுடலை இந்து கோயிலுக்கு அருகாமையில் தகனம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு அவரை அடக்கம் செய்யக் கூடாதென நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனையடுத்து ஏற்கனவே குற்றம் ஒன்றிற்காக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை பெற்ற கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பிலிருந்து அங்குவந்து நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி அவரது ஆதரவாளர்களுடன் இந்து கோயிலுக்கு அருகாமையில் பௌத்த தேரரின் உடலை தகனம் செய்தார்.

எனினும், நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி செயல்பட்ட அவருக்கு எதிராக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறித்த பௌத்த தேரரின் இறுதிக் கிரியையின் போது அங்கு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய அதிகாரிகள் அதனை செய்யாமல் மௌனம் காத்தனர்.

இந்தச் செயற்பாடுகளின் போது அங்கு சமூகமளித்திருந்த சட்டத்தரணிகள் கூட தாக்கப்பட்டுள்ளனர். அங்கு குழுமியிருந்த அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டவர்களைத் தடுக்கத் தவறி விட்டனர். இது இந்து மக்களின் உரிமையை மீறும் செயலாகும். இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது

இது தொடர்பில் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டோருக்கெதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Wed, 10/09/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக