ஷெபீல்ட் அணியிடம் ஆர்சனலுக்கு அதிர்ச்சித் தோல்வி

ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஆர்சனல் அணிக்கு எதிரான போட்டியில் 1--0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய ஷெபீல்ட் யுனைடட் அணி புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

பிரமல் லேன் அரங்கில் இலங்கை நேரப்படி நேற்று (22) அதிகாலை நடைபெற்ற போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ஆர்சனல் கடந்த எட்டுப் போட்டிகளின் பின் முதல் தோல்வியை சந்தித்தது.

கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி லிவர்பூல் அணிக்கு எதிராக 3-1 என கடைசியாக தோல்வியை சந்தித்த ஆர்சனல் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது. ஆர்சனல் தற்போது 5ஆவது இடத்தில் உள்ளது. போட்டியின் முதல் பாதியில் லைஸ் மௌசட் பெற்ற தீர்க்கமான கோலே ஷெபீல்ட் யுனைடட்டின் வெற்றி கோலாகவும் இருந்தது. பிரான்ஸ் முன்கள வீரரான மௌசட் ப்ரீமியர் லீக்கில் இந்த பருவத்திலேயே ஷெபீல்ட் யுனைடட் அணிக்காக ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், முதல் பாதியின் ஆரம்பத்தில் ஆர்சனல் வீரர் நிகொலஸ் பெபேவுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு ஒன்றை அவர் தவறவிட்டார்.

ஆர்சனல் அணி அடுத்து நாளை வியாழக்கிழமை (24) ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரில் போர்த்துக்கல் கழகமான விட்டோரியாவை எதிர்கொள்ளவுள்ளது.

Wed, 10/23/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக