முட்டை, கோழியிறைச்சி இறக்குமதி தீர்மானத்தை வாபஸ் பெறவேண்டும்

தவறினால் வீதிக்கு இறங்குவோம்

முட்டை மற்றும் கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கு வாழ்க்கைச் செலவு குழு எடுத்துள்ள தீர்மானத்தை இன்னும் ஓரிரு தினங்களுக்குள் வாபஸ் பெறாவிடின் நாடு முழுவதுமுள்ள தேசிய முட்டை, கோழி இறைச்சி உற்பத்தியாளர்களுடன் இணைந்து வீதியிலிறங்கிப் போராட்டம் நடத்தப்போவதாக சுதந்திரக் கட்சி பாராளுமன்ற

உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்தார். முட்டையும் கோழி இறைச்சியும் போதியளவு கையிருப்பிலுள்ள நிலையில், அரசாங்கம் வாழ்க்கைச் செலவு குழுவுக்கூடாக எடுத்திருக்கும் இத் தீர்மானமானது தேசிய உற்பத்தியாளர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலென்றும் அவர் விசனம் தெரிவித்தார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்றுக் காலை (22) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கோழி இறைச்சிக்குத் தேவையான சுமார் 10 ஆயிரம் மெட்ரிக்தொன் கோழியும் முட்டைகளும் தற்போது கையிருப்பில் உள்ள நிலையில், வாழ்க்கைச் செலவுக் குழு கோழி இறைச்சியையும் முட்டையையும் இறக்குமதி செய்ய எடுத்துள்ள தீர்மானத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் விவசாயிகளுக்கு அநீதி விளைவிக்கும் வகையிலான தீர்மானங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்திய ஜயசேகர எம்.பி., தற்போது கோழிகளை அடைத்து வைத்திருக்கும் முறை தொடர்பில் அதிருப்தியடைவதாகவும் அம்முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றும் மேலும் தெரிவித்தார்.

 

லக்ஷ்மி பரசுராமன்

Wed, 10/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை