ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார மேடை இனவாத சேற்றுக்குழியாக மாறியுள்ளது

ஜனாதிபதி தேர்தலில் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் சில அரசியல் கட்சிகள் இனவாதம், தீவிரவாதத்தில் இறங்கியிருப்பது வெட்கக் கேடானது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். நீர்கொழும்பில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார மேடை இனவாத சேற்றுக்குழியாக மாறியுள்ளது. அங்கு சில அரசியல் கட்சிகள் இனவாதம் மற்றும் தீவிரவாதத்தை எவ்வாறு தமக்குச் சாதகமாக பயன்படுத்தலாம் என்பதில் குறியாகியுள்ளனர் என்றும் அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறினார்.

 

ஒரு சில அரசியல் மேடைகளில் இப்போது பேசுபொருளாக உள்ளது பலாலி விமான நிலைய பெயர்ப் பலகையாகும்.

அதில் முதலில் மேலே உள்ளது தமிழ் மொழி, அதனையடுத்து சிங்கள மொழியில் உள்ளது. இது இப்போது சிங்கள வாக்குகள் அதிகமுள்ள இடங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

சிங்களத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இன முறுகலை ஏற்படுத்தி சிங்கள வாக்குகளை பெற ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர்.

ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவின் யாழ்ப்பாண அலுவலகத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு முதலிடமும் சிங்கள மொழிக்கு இரணடாவது இடமும் கொடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் வாக்குகளைப் பெறவே இவ்வாறு தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பவாத அரசியலை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். அத்துடன் இவ்வாறான அரசியல்வாதிகளையும் நாம் நிராகரிக்கிறோம். தேசிய மக்கள் சக்தி அனைத்து இனங்களினதும் உரிமைகளைப் பாதுகாக்க முன்னிற்கிறது என்று அநுரகுமார திசாநாயக்க அங்கு குறிப்பிட்டார்.

 

Tue, 10/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை