துருக்கி படை நடவடிக்கையை தடுக்க சிரிய அரசுடன் குர்திஷ் உடன்படிக்கை

வட கிழக்கு நகருக்குள் நுழைந்தது சிரிய இராணுவம்

துருக்கி படை நடவடிக்கையை தடுப்பதற்காக குர்திஷ் போராளிகளுக்கு உதவ சிரிய இராணுவத்தை அனுப்புவதற்கு அந்நாட்டு அரசு இணங்கியுள்ளது.

இதன்படி சிரிய அரச படை நாட்டின் வட கிழக்கு நகருக்குள் நுழைந்திருப்பதாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பகுதியில் நீடிக்கும் ஸ்திரமற்ற சூழல் காரணமாக அங்கிருந்து தமது துருப்புகள் அனைத்தையும் வாபஸ் பெறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துருக்கி தமது நாட்டை அண்மித்த சிரிய எல்லைகளில் இருந்து குர்திஷ் படையினரை வெளியேற்றும் நோக்கில் கடந்த வாரம் இந்தப் படை நடவடிக்கையை ஆரம்பித்தது.

அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயக படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் கடந்த வார இறுதியில் கடும் தாக்குதல்கள் இடம்பெற்றது. துருக்கி இரு முக்கிய எல்லை நகரங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் இரு தரப்பிலும் பல டஜன் பொதுமக்கள் மற்றும் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மோதல்களால் இஸ்லாமிய அரசுக் குழு மீண்டும் எழுச்சி பெறும் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்கில் உள்ள ஐன் இசாக் முகாமில் இருந்து வெளிநாட்டு ஐ.எஸ் உறுப்பினர்களின் சுமார் 800 உறவினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பிச் சென்றிருப்பதாக குர்திஷ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சிரியாவில் ஐ.எஸ் குழுவுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் பிரதான கூட்டாளியாக சிரிய ஜனநாயகப் படை செயற்பட்டது. இந்நிலையில் தம்மை கைவிட்டு அமெரிக்கா அந்தப் பிராந்தியத்தில் இருந்து வாபஸ் பெற்றது குறித்து குர்திஷ்கள் கடும் கோபத்தை வெளியிட்டுள்ளனர்.

எனினும் குர்திஷ் படையை பயங்கரவாதிகளாக கருதும் துருக்கி அந்தப் படையை எல்லையில் இருந்து வெளியேற்றி, 30 கிலோமீற்றர் பகுதியில் பாதுகாப்பு வலயம் என்று அமைக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது துருக்கியில் தஞ்சமடைந்திருப்பும் சிரிய அகதிகளை இந்த பாதுகாப்பு வலயத்திற்குள் மீள்குடியேற்ற துருக்கி திட்டமிடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் குர்திஷ்களல்லாதோர் ஆவர். இது உள்ளுர் குர்திஷ் மக்களை இனச்சுத்திகரிப்பு செய்யும் செயல் என்று விமர்சனங்களும் வலுத்துள்ளன.

இதனிடையே சிரிய இராணுவத்தை முழு எல்லை பகுதியிலும் நிலை நிறுத்துவதற்கு உடன்படிக்கை எட்டப்பட்டதாக வடக்கு சிரியாவில் குர்திஷ் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

துருக்கி இராணுவம் மற்றும் கூலிப்படைகள் ஊடுருவிய பகுதிகளை விடுவிப்பதற்கும் இந்த ஆக்கிரமிப்புக்கு பதில் நடவடிக்கை எடுப்பதற்கும் சிரிய ஜனநாயக படைக்கு இந்த படை குவிப்பு உதவும் என்று குர்திஷ் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அப்ரின் போன்ற துருக்கி இராணுவத்தின் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட ஏனைய சிரிய நகரங்களையும் விடுவிப்பதற்கு இது வழிவகுக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இரண்டு மாதம் நீடித்த படை நடவடிக்கை மூலம் துருக்கிப் படை மற்றும் துருக்கி ஆதரவு சிரிய கிளர்ச்சியாளர்கள் குர்திஷ் படையை வெளியேற்றி அப்ரின் நகரை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

தனது முக்கிய கூட்டாளியான அமெரிக்கா கைவிட்ட நிலையில் இந்த உடன்படிக்கை குர்திஷ்களின் நிலைப்பாட்டில் முக்கிய மாற்றமாக உள்ளது. இதற்கு சிரிய அரசு தனது கடப்பாட்டை இன்னும் உறுதி செய்யவில்லை.

எனினும் சிரிய அரசு மற்றும் அதன் கூட்டணியான ரஷ்யாவுடன் வேதனைக்குரிய விட்டுக்கொடுப்புகள் செய்ய வேண்டி இருக்கும் என்று சிரிய ஜனநாயக படையின் தலைவர் மஸ்லுௗம் அப்தி, சஞ்சிகை ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

“அவர்களின் வாக்குறுதிகளை நாம் நம்பவில்லை. உண்மையை கூறுவதென்றால் யாரை நம்புவதென்று தெரியவில்லை” என்று அவர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த சமரசங்களா? மக்களா? எனப் பார்க்கும்போது மக்களின் வாழ்வைத்தான் நாங்கள் தேர்வு செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வட கிழக்கு சிரியாவில் இருந்து கடந்த வாரம் துருப்புகளை வாபஸ் பெறும் எதிர்பாராத முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்தது, துருக்கி படை நடவடிக்கைக்கு வழி விடுவதாக இருந்தது. இது முதுகில் குத்தும் வேலை என்று அமெரிக்கா மீது குர்திஷ் போராளிகள் குற்றம்சாட்டினர்.

துருக்கி முன்னர் எதிர்பார்த்ததை விடவும் ஆழமாக சிரியாவுக்குள் ஊடுருவியதை அடுத்து மேலும் 1,000 துருப்புகளை வடக்கில் இருந்து அகற்றிக் கொண்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் குறிப்பிட்டிருந்தார்.

வடக்கு சிரியாவில் வேகமாக முன்னேறி வரும் துருக்கிப் படை 109 சதுர கிலோமீற்றர் பகுதியை ஏற்கனவே கைப்பற்றியதாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டார்.

முக்கிய எல்லை நகரான ராஸ் அல் ஐன் துருக்கியின் கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக செய்தியாளர்களிடம் எர்துவான் குறிப்பிட்டார். எனினும் அந்த நகரின் புறநகர் பகுதியில் இருந்து துருக்கிப் படையை வாபஸ் பெறச் செய்ததாக சிரிய ஜனநாயக படை குறிப்பிட்டுள்ளது.

120 கிலோமீற்றர்கள் தொலைவில் இருந்து தால் அப்யாத் நகரை துருக்கிப் படை முற்றுகை இட்டதாக எர்துவான் குறிப்பிட்டுள்ளார். அந்த நகரை துருக்கிப் படை கிட்டத்தட்ட தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக சிரிய கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிரிய ஜனநாக படைக்கு எதிரான துருக்கியின் படை நடவடிக்கையின் பிரதான இலக்குகளாக ராஸ் அல் ஐன் மற்றும் தால் அப்யாத் நகரங்கள் உள்ளன.

களத்தில் இருக்கும் துருக்கி ஆதரவு சிரிய போராளிகள் தெற்கு எல்லையில் சுமார் 30–35 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் முக்கிய பாதையை கைப்பற்றி இருப்பதாகவும் துருக்கி அறிவித்துள்ளது.

இந்த மோதல்களில் வட கிழக்கு சிரியாவில் 50 க்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் 100க்கும் அதிகமான குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.

நான்கு துருக்கி படையினர் மற்றும் 16 துருக்கி ஆதரவு போராளிகள் கொல்லப்பட்டதாக துருக்கி குறிப்பிட்டுள்ளது.

மோதல்கள் காரணமாக இதுவரை 160,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்திருப்பதோடு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என ஐ.நா மனிதாபிமான உதவிகளுக்கான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பிராந்தியத்தில் இருக்கும் தமது பணியாளர்களின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

ஐ.எஸ் உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியை நோக்கி இந்த மோதல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தக் கைதிகளை குர்திஷ்களால் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

தமது கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ஏழு சிறைகளில் 12,000க்கும் அதிகமான ஐ.எஸ் சந்தேக நபர்களை தடுத்து வைத்திருப்பதாக சிரிய ஜனநாயகப் படை குறிப்பிட்டுள்ளது. இவர்களில் குறைந்தது 4,000 பேர் வெளிநாட்டினர்களாவர். இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் உறுதி செய்யப்படாதபோதும் சிலது துருக்கி எல்லையை ஒட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் இந்த ஐ.எஸ் கைதிகளை பொறுப்பேற்பதாக துருக்கி அறிவித்துள்ளது.

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை