பாதுகாப்பு செயலர்,பொலிஸ் மாஅதிபர், உளவுப்பிரிவு பணிப்பாளர் தவறிழைப்பு

ஏப். 21 தாக்குதல் : தெரிவுக்குழுவின்  242 பக்க அறிக்ைக சபையில் சமர்ப்பிப்பு

ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கடமை தவறியதாகவும் சுட்டிக்காட்டு

அரச புலனாய்வு சேவை பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,பொலிஸ் மாஅதிபர், தேசிய பாதுகாப்பு பிரதானி, இராணுவ புலனாய்வு பணிப்பாளர் ஆகியோர் தமது பொறுப்புக்களில் தவறியமையும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது கடமைகளிலிருந்து தவறியுள்ளமையுமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (ஏப்பிரல் 21) இடம்பெறக் காரணம் என தெரிவுக்குழு தனது விசாரணை இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

அரச புலனாய்வு சேவை பணிப்பாளருக்கு பாரிய பொறுப்புள்ளதோடு ஏனையோரும் தமது கடமையை தவறியுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் விசேட பாராளுமன்ற தெரிவுக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், சட்ட மாஅதிபர் போன்றோரும் தமது கடமைகளை தவறியுள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு ஜனாதிபதி தேர்தலுக்கு

முன்னர் நாட்டில் குழப்பம் ஏற்படுத்தி பயம், நிச்சயமற்ற தன்மை உருவாக்குவதற்காக புலனாய்வு தகவல்கள் தொடர்பில் செயற்படவில்லையா? என்பது குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவுக்குழு பரிந்துரை செய்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 240 பக்கங்களைக் கொண்ட இவ் அறிக்கையில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதிருக்க பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தெரிவுக்குழுவின் சார்பில் அதன் உறுப்பினர் ஜயம்பத்தி விக்கிரமரத்ன விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார்.

தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பாக பிற்பகல் பாராளுமன்ற குழு அறையில் ஊடகமாநாடு நடத்தப்பட்டதோடு தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பாக இங்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதன்படி கூறப்பட்டதாவது,

மேம்படுத்தப்பட்ட நிதி மேற்பார்வைப் பொறிமுறையொன்றை நிறுவ வேண்டும், அரசியல்வாதிகள், பொறுப்புக் கூறக்கூடியவர்களாக இருக்க வேண்டும். வளர்ந்து வரும் பயங்கரவாத சூழ்நிலையில் கல்வித்துறையை மீளமைக்க வேண்டும்.

நீதி வழங்குவதில் காணப்படும் தாமதத்தை நீக்க வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைக்க வேண்டும். ஊடக அறிக்கையிடல், போலி செய்திகள் குறித்தும் வஹாபிசம் குறித்து நடவடிக்கை எடுப்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுடன் சஹ்ரானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக சாட்சி விசாரணையில் உறுதிப்படுத்தப்படவில்லை. இஸ்லாம் தொடர்பான வெறுப்பு அதிகரிக்கின்ற நிலையிலே பயங்கரவாதம் எழுச்சி காணப்பட்டது. அண்மைக் காலத்தில் வஹாப்வாதம், அராபிய மயமாக்கல் அதிகரிக்கும் நிலை அவதானிக்கப்பட்டது.

வஹாப்வாத பரவல், காத்தான்குடியில் அராபிய மயமாக்கல்,விசேடமாக கிழக்கில் முஸ்லிம் சமூகத்தில் தீவிரவாதத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளது என்பதுடன் இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்.

பல அரசியல்வாதிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஆத்திரமூட்டும் பொறுப்பற்ற பேச்சுக்களை வெளியிட்டனர். தாக்குதல் தொடர்பில் முன்கூட்டி புலனாய்வு தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காதது குறித்து சான்றுகள் உள்ளன. 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி இது தொடர்பில் அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்துள்ளது. இதனை புலனாய்வு மற்றும் பாதுகாப்பு தரப்பிற்கு வழங்குவதில் தாமதம் காணப்பட்டுள்ளது.

2018 ஏப்ரல் 8 முதல் சஹ்ரான் குறித்த ஏனைய நிறுவனங்கள் மேற்கொள்ளும் விசாரணைகளை நிறுத்துமாறு அரச புலனாய்வு சேவை பொலிஸ் மாஅதிபரை கோரியது. அதற்கமைய பயங்கரவாத விசாரணை பிரிவு இது தொடர்பான விசாரணைகளிலிருந்து நிறுத்தப்பட்டது என அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி,

மே மாதம் 23 முதல் 24 கூட்டங்கள் நடத்தியதில் 51 பேர் சாட்சியமளித்தார்கள். எமது அறிக்கையில் 8 முக்கிய பரிந்துரைகள் உள்ளன. புலனாய்வு தகவல் இருந்தும் செயற்படாத குறைபாடு இருந்தமை நிலைமை மோசமாக காரணமானது. 2011 இல் மேல் மாகாண ஆளுநராக இருந்த அலவி மௌலானதான் முதலில் காத்தான்குடி அடிப்படைவாதம் பற்றி கூறியிருந்தார்.

பின்னர் 2013/2014 களில் பல முஸ்லிம் அமைப்புகளும் தகவல் கூறியிருந்தன. அரச புலனாய்வு பிரிவு தமது பொறுப்பை தவறியது. சகல தரப்பினரதும் கருத்துக்களை பெற்றே எமது அறிக்கை தயாரிக்கப்பட்டது.எவரையும் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு எமது குழுவினால் முடியாது.பரிந்துரைகளை தான் முன்வைத்துள்ளோம்.

குழு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

வெளிப்படை தன்மையுடன் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இரு அரச நிறுவனங்களுக்கு இடையிலான மோதல் இங்கு பிரதான காரணமாக உள்ளது. ஒரு நிறுவனத்தின் மீது மாத்திரம் குற்றம் சுமத்த முடியாது. அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் போன்றோருக்கு பொறுப்புள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான அளுத்கமை, திகன சம்பவங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதம் உருவாக காரணமாகியுள்ளது.

ஒரு அடிப்படைவாதம் மற்றொரு அடிப்படைவாதத்தை போசிக்கிறது. பாராளுமன்றத்தில் பகிரங்கமாக சபாநாயகர் அறிவித்தே குழு உறுப்பினர்களை நியமித்தார். யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் தற்பொழுது குற்றஞ்சாட்டுகின்றனர் .

அமைச்சர் ரவூப் ஹக்கீம்

புலனாய்வு தகவல் பரிமாற்ற விருப்பமின்மை இங்கு பிரதான பிரச்சினையாக அமைந்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதம் மட்டுமன்றி ஏனைய அடிப்படைவாதங்கள் குறித்தும் கவனிக்க வேண்டும். ஒரு அடிப்படைவாதத்தினால் இன்னொரு அடிப்படைவாதம் தலைதூக்கும். இந்த அறிக்கையை சபாநாயகருக்கு சட்ட மாஅதிபருக்கு கையளித்து எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க முடியும்.

பிரதி சபாநாயகர்

அதிகாரிகள்,புலனாய்வு அதிகாரிகள்,பிரதமர்,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் போன்றோருக்கும் பொறுப்பு உள்ளது. இதிலுள்ள பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டும். தெரிவுக் குழுவிலுள்ள எந்த ஒரு உறுப்பினர் குறித்தும் சந்தேகம் கிடையாது.சகலரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்

Thu, 10/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை