சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரிக்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

இதற்கான தீர்மானத்தை கட்சியின் உயர்குழு ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. அத்துடன், ஐ.தே.முவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பில்

 

கலந்துரையாடப்பட்டதுடன், சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடி இதற்கு இணக்கம் காணவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை 10 மணிக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழு கூடியது.

கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், அரவிந்த குமார், கூட்டணியின் பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர், பிரதி செயலாளர் சண் பிரபாகரன், அந்தனி லோரன்ஸ், கே.ரீ. குருசாமி, சிறிதரன், சரஸ்வதி சிவா, உதயகுமார், புத்திர சிகாமணி, அனுஷா சந்திரசேகரன், விஜயசந்திரன் உட்பட முக்கிய தலைவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற வேண்டிய விடயங்கள் தொடர்பில் கூட்டணியின் தலைவர்கள் தீர்க்கமாக கலந்துரையாடிள்ளதுடள், சஜித் பிரேமதாசவுடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய உடன்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளனர்.

நேற்றைய சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன்,

மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழம், பெருந்தோட்டத்துறை கட்டமைப்பை மாற்றியமைத்தல் (தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக மாற்றுதல்), வீடமைப்புத் திட்டத்தை விரிவுபடுத்துதல், தோட்டத்தில் பணிபுரியாதவர்களுக்கும் வீடுகளை வழங்குதல், நகர்ப்புறங்களில் பணிபுரியும் தோட்டத்தவர்களுக்கு நகர்ப்புற வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்துதல், ஆசிரியர் சேவை மற்றும் அரச சேவைக்கு விகிதாசார அடிப்படையில் உரிய அங்கீகாரம் வழங்குதல், பெருந்தோட்டக் கல்வி அபிவிருத்திக்கான உறுதிப்பாடுகள், மக்கள் தொகைக்கு ஏற்ப கிராம சேவகர் பிரிவுகள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி நிறுவனங்களை உருவாக்குதல் உட்பட பல்வேறு விடயங்களை சஜித் பிரேமதாஸவுடன் கலந்துரையாடி இணக்கப்பாடு எட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை