ப்ரீமியர் லீக்கில் முதலிடத்தை நெருங்கும் மன்செஸ்டர் சிட்டி

ஆஷ்டன் வில்லாவுக்கு எதிரான போட்டியின் இரண்டாவது பாதியில் 3 கோல்களை பெற்று வெற்றியீட்டிய மன்செஸ்டர் சிட்டி கழகம் ப்ரீமியர் லீக்கில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை நெருங்கியுள்ளது. புள்ளிப்பட்டியலில் லிவர்பூலை விடவும் மூன்று புள்ளிகளால் மாத்திரமே மன்செஸ்டர் சிட்டி பின்தங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது.

எட்டிஹாட் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் தனது நடப்புச் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள போராடும் மன்செஸ்டர் சிட்டி முதல் பாதியில் தடுமாற்றம் கண்டதோடு ஆஷ்டன் வில்லா கோல் முயற்சிகளிலும் ஈடுபட்டதை காணமுடிந்தது.

எனினும் முதல் பாதி இடைவேளைக்கு பின் வெறும் 20 நிமிடங்களில் காப்ரியல் ஜேசுஸ் பரிமாற்றிய பந்தைக் கொண்டு ரஹீம் ஸ்டேர்லிங் கோல் புகுத்தி மன்செஸ்டர் சிட்டியை முன்னிலை பெறச் செய்தார். இந்தப் பருவத்தில் ஸ்டேர்லிங்கின் 13 ஆவது கோலாக இது இருந்தது.

இந்நிலையில் 65 ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் சிட்டி தனது இரண்டாவது கோலை பெற்றபோதும் அந்த கோலை யார் பெற்றார் என்ற குழுப்பம் ஏற்பட்டது. எனினும் தொலைக்காட்சி நடுவர் உதவி மூலம் அது டேவிட் சில்வாவின் கோல் என உறுதியானது.

ஐந்து நிமிடங்கள் கழித்து இல்காய் குன்டோகன் பெற்ற கோலின் மூலம் மன்செஸ்டர் சிட்டி தனது வெற்றியை உறுதி செய்துகொண்டது.

எனினும் பெர்னான்டின்ஹோ 87 ஆவது நிமிடத்தில் இரண்டாவது மஞ்சள் அட்டையை பெற்றதால் மன்செஸ்டர் சிட்டி கடைசி ஒரு சில நிமிடங்களை 10 வீரர்களுடன் விளையாடியது.

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை