பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்ட வரலாற்றை எம்மால் மறக்க முடியாது

இந்த நாட்டு முஸ்லிம் மக்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்ட கறல் படிந்த வரலாற்றை எம்மால் மறக்க முடியாது.

சாய்ந்தமருதில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபகஷவை ஆதரித்து கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார மேடையில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் , வடக்கிலிருந்து கிழக்கை தனியாக பிரித்து மக்களையும் மண்ணையும் காப்பாற்றி, எமது நாட்டை ஒரு முதுகெலும்புள்ள இராஜ்சியமாக மாற்றி எமக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க வழியமைத்த மஹிந்த ராஜபக்ஷவை கிழக்கு மண்ணும் மக்களும் என்றும் மறந்து விடக்கூடாது.

தமது உயிரைப் பணயம் வைத்து கடலில் மீன் பிடித்து தமது வாழ்க்கையை ஓட்டிச்செல்லும் மீனவர்கள் மட்டுமல்ல, பள்ளிகளில் நிம்மதியாக தொழ முடியாத, கோயில்களில் புசாரிகள் தமது கடமைகளை சரியாக செய்ய முடியாத, பாடசாலைகளுக்கு எமது பிள்ளைகள் போக முடியாத, மீன் சந்தைக்கு போனால் குண்டு வெடிக்கும் என்ற நிலைமையை மாற்றி புலிப்பயங்கரவாதத்தை தோற்கடித்து எம்மை நிம்மதியாக வாழ வைத்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியினை ஒரு கணம் நினைத்து பாருங்கள்.

பெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் உருவாக்கிய ஸ்தாபனத்தினூடாக முஸ்லிம்களுக்கு எதையாவது செய்யலாம் என்றிருந்த நாம் இன்று அந்த இயக்கத்துடன் இல்லை.

மஹிந்த ராஜபக்ஷ அவர்களை 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக்கி கொடிய பயங்கரவாதத்தை இல்லாமல் செய்து தாருங்கள், வடக்கிலிலிருந்து கிழக்கை பிரித்து தாருங்கள், இலங்கையில் வாழும் எல்லா இனத்தவர்களுக்கிடையிலும் ஒற்றுமையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் பொதுவான திட்டமொன்றை வகுத்து தாருங்கள் என்ற மூன்று விடயங்களை அவரிடம் நாம் முன் வைத்தோம்.

முதல் இரண்டு விடயங்களையும் முடித்து மூன்றாவது விடயத்தை முடிப்பதற்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும், இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஸாத் பதியுதீனும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்ததும் இனக்கலவரங்கள் வெடித்து முஸ்லிம்களை இந்த தலைவனிடமிருந்து பிரித்து இந்த நாட்டை சின்னா பின்னமாக்குவதற்காக 2015 ஆம் ஆண்டு நாம் பாவிக்கப்பட்டோம்.

ஹக்கீம் மற்றும் ரிஸாத் ஆகியோர் நாடகமாடி குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்,முஸ்லிம் மக்களை ஏமாற்றி நம்மையெல்லாம் நாட்டுப்பற்று அற்றவர்களாக மாற்றி மஹிந்த ராஜபகஷவுக்கு நன்றிக்கடனற்றவர்களாக காட்டி எம்மையெல்லாம் பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் எதிரிகளாக பார்க்கப்படுபவர்களாக காட்டினார்கள் எனத் தெரிவித்தார்.

 

மாளிகைக்காடு குறூப் நிருபர்

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை