ஜெர்மனி யூத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு

ஜெர்மனியின் ஹேலே நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்துக்கு அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.

யூதர்களின் யோம் கிப்பூர் புனித நாளான கடந்த புதனன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய சந்தேக நபரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும் அதற்கு முன் அந்தத் தாக்குதல் பற்றிய நேரடி வீடியோவை சந்தேக நபர் இணைய விளையாட்டுத் தளத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த வீடியோ அகற்றப்பட்டுவிட்டது. வழிபாட்டுத் தலத்துக்குச் செல்வதற்கு முன், சந்தேக நபர் யூதர்களுக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

வழிபாட்டுத் தலத்துக்குள் நுழைய முயன்றபோது அவர் தடுக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

27 வயதான அந்த சந்தேக நபர் ஜெர்மனியைச் சேர்ந்தவராவார். தனிப்பட்ட முறையில் அவர் தாக்குதலை நடத்தியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இராணுவத்தினரைப் போன்று உடையணிந்து வந்த சந்தேக நபர் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு பெர்லினில் உள்ள பிரதான யூத வழிபாட்டுத் தலத்தில் நினைவஞ்சலி நடத்தப்பட்டது. அதில் ஜெர்மானி பிரதமர் ஏங்கலா மெர்க்கல் கலந்து கொண்டார். தாக்குதலைத் தொடர்ந்து, ஜெர்மனியிலுள்ள யூத வழிபாட்டுத் தலங்களிலும், பிற இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Fri, 10/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை