சாய்ந்தமருது மக்கள் கோட்டாபயவை ஆதரிக்க எடுத்த முடிவு பிழையானது

கல்முனை தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் அப்துர் ரஸாக்

சாய்ந்தமருது நகரசபை தொடர்பில் ஹக்கீம் , ஹரீஸ் மீது கொண்டுள்ள ஆத்திரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க சாய்ந்தமருது மக்கள் எடுத்த முடிவு பிழையானது.

இவ்வாறு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கல்முனைத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போது உரையாற்றிய கல்முனைத் தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துர் ரஸாக் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நகரசபை கோரிக்கை என்பது சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையாகும். அதனை பெற்றுக் கொள்வதில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைமையில் மக்கள் பணிமனையினூடாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது இதுவரை நிறைவேறாத நிலையில், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஓரணியில் சஜித் பிரேமதாசவின் கரங்களை பலப்படுத்தி வெற்றியடைய செய்ய திரண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் சாய்ந்தமருது மக்கள் எதிராக வாக்களிக்க முயற்சிப்பது மிகவும் மடத்தனமான ஒரு முடிவாகும். இதுவொரு வரலாற்று தவறாகவும் எழுதப்படலாம்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்எம்.எம்.ஹரீஸ் மீது கொண்டுள்ள ஆத்திரத்தின் அடிப்படையில் அவர்கள் ஆதரிக்கும் வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க எடுத்திருக்கும் முடிவு சாய்ந்தமருது மக்கள் அனைவரையும் காட்டிக் கொடுக்கும் ஒரு செயற்பாடாகும்.

சாய்ந்தமருது பிரதேசம் அதிகமாக படித்தவர்களையும், பட்டதாரிகளையும், சட்ட வல்லுனர்களையும், வைத்தியர்களையும், பொறியியலாளர்களையும் கொண்டதாகும்.

இப்பிரதேச மக்கள் இந்த நி​ைலமையை சற்று சிந்தித்து நாட்டின் பெரும்பான்மை சமூகமும் , தமிழ் சமூகமும் , முஸ்லிம் சமூகமும் எடுத்திருக்கும் முடிவிற்கு அமைய வெற்றியின் பங்காளர்களாக சாய்ந்தமருது மக்களும் மாற வேண்டும் என்பதே எனது விருப்பம். சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபையை பெற்றுக் கொடுப்பதில் நானும் ஐக்கிய தேசியக் கட்சியும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்.

( மாளிகைக்காடு குறூப் நிருபர்)

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை