அற்பசொற்ப சலுகைகளுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடகுவைத்துவிட்டார்கள்

அற்பசொற்ப சலுகைகளுக்காகவும், அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் 67 வருடகாலம் பழமைவாய்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ராஜபக் ஷக்களிடம் அடகுவைத்துவிட்டதாக இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு திரட்டி அவிசாவளையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“குடும்ப ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை ராஜபக் ஷக்கள் உருவாக்கியுள்ளனர். இலங்கையை தமது குடும்பமே ஆளவேண்டும் என்பதே அவர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக இருக்கின்றது. குடியரசு எனக் கூறப்பட்டாலும் கடந்த காலங்களில் குடும்ப ஆட்சியே தலைவிரித்தாடியது. இது வெளிப்படையாக தெரிந்தும், எதிர்ப்பதற்கு துணிவற்றவர்களாக அதேபோல் ராஜபக் ஷக்களின் முதுகில் ஏறி, இனவாதம் பேசி அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக மஹிந்தவின் பங்காளிகள் மௌனம் காத்தனர். இதனால் கொடுமை தாங்காது பொங்கியெழுந்து ராஜபக் ஷ அரசாங்கத்திலிருந்து வெளியேறிய துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட சுதந்திரக்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜபக் ஷ குடும்பத்தின் அரசியல் அராஜகங்களை கடந்தகாலத்தில் பட்டியலிட்டுக்காட்டி பேசியதுடன், பல தகவல்களையும் பொதுவெளியில் போட்டு உடைத்தனர். அத்துடன் நின்றுவிடாமல் மஹிந்தவிடமிருந்து சுதந்திரக்கட்சியையும் கைப்பற்றினர். இறுதியில் தேசிய அரசமைக்க நேசக்கரம் நீட்டி, அதில் பங்காளியானார்கள். எனினும், நல்லாட்சி என்ற கோட்பாட்டை சுதந்திரக்கட்சி உறுப்பினர்களே திட்டமிட்ட அடிப்படையில் குழப்பியடித்தனர். ஐக்கிய தேசியக்கட்சியின் சிறப்பான திட்டங்களுக்கு கூட போர்க்கொடி தூக்கினர். எனவே, மஹிந்தவின் உளவாளிகளாகவே அவர்கள் செயற்பட்டனர் என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது. அதேவேளை, சுதந்திரக்கட்சியின் இரண்டாம்நிலை தலைவர்களின் கொள்கையற்ற இரட்டை நிலைப்பாட்டாலேயே சுதந்திரக்கட்சி மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது அமரர். பண்டாரநாயக்க உயிருடன் இருந்திருந்தால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைகண்டு இரத்த கண்ணீர் வடித்திருப்பார். அதுமட்டுமல்ல குடும்ப ஆட்சிக்காக பாடுபடும் ராஜபக் ஷக்களுக்கு சிறந்த பாடத்தை புகட்டுவதற்காக கட்சியை மீட்டெடுப்பதற்காகவும் ஜனநாயக ஆட்சிக்காகவும் சஜித்துக்கு ஆதரவளித்திருப்பார்.

எனவே, அவரின் மகளான சந்திரிக்கா அம்மையார், கட்சி செயற்பாட்டாளர்களுடன் இணைந்து கட்சியை மீட்பார் என்றும், கட்சியை காட்டிக்கொடுத்தவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக சஜித்துக்கு வாக்களிக்குமாறு அறிவிப்பு விடுப்பார் என்றும் நாம் நம்புகின்றோம். பண்டாரநாயக்கவின் நாமத்தை ஒழித்துவிட்டு, தமது குடும்பத்துக்காக ஒரு கட்சியை உருவாக்க வேண்டும் என்பதே ராஜபக் ஷகளின் கனவாக இருந்தது. அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது.

ஆகவே, ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் விரும்பும் சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்கள் சஜித்துக்கே வாக்களிக்க வேண்டும். கோட்டாபயவுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் குடும்ப ஆட்சிக்கு வழங்கப்படும் வாக்குகள் என்பதுடன், தாய்க்கட்சிக்கு இழைக்கும் துரோகம் என்பதை சுதந்திரக்கட்சி செயற்பாட்டாளர்கள் புரிந்து செயற்பட வேண்டும். நாட்டில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் விரும்பும் விஜித் விஜயமுனி சொய்சா, பௌசி போன்ற சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் எம்முடன் இருக்கின்றனர். சு.கவின் முடிவு தவறு என தெரிந்துதான் ஜனாதிபதியும் நடுநிலை வகிக்கிறார் என அவர் தெரிவித்தார்.

Thu, 10/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை