அழிக்கும் தலைவர் வேண்டுமா, மக்கள் தலைவர் வேண்டுமா?

நாட்டை அழிக்கும் தலைவர் வேண்டுமா? அல்லது மக்களால் உருவான மக்கள் தலைவர் வேண்டுமா? என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

குடும்ப ஆட்சியை ஒழித்து ரணசிங்க பிரேமதாசா ஆரம்பித்த பயணத்தை சஜித் பிரேமதாசாவின் மூலம் முன்னோக்கிக் கொண்டுசெல்வோம் என்றும் அவர் கூறினார். 

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முதலாவது பிரசாரக் கூட்டம் நேற்று காலிமுகத் திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 

1997ஆம் ஆண்டு 6/5பெரும்பான்மையுடன் ஜே.ஆர்.ஜயவர்தன வெற்றிபெற்றார். அன்று அவருக்கு பக்க பலமாக  இருந்தவர் ரணசிங்க பிரேமதாசதான்.  ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் முதல் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பாரிய கைத்தொழில் புரட்சிகள் ஏற்பட்டதுடன், நாட்டில் ஆடை தொழில்துறை பாரிய வளர்ச்சி கண்டது. எமது நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தின் பிரதான அங்கமாக ஆடை தொழில்துறை மாறியது. இதனால் வேலைவாய்ப்புகள் பலதுறையிலும் உருவாகின. வீடுகளையும் ரணசிங்க பிரேமதாசவே அமைத்துக் கொடுத்தார். 

அன்று குடும்ப ஆட்சி இருக்கவில்லை. மக்களுக்கு அவர் நன்றாக சேவை செய்தார். அவர் ஆரம்பித்த பயணத்தை சஜித் பிரேமதாச மூலம் முன்னோக்கி கொண்டு செல்வோம். 

ஹம்பாந்தோட்டையில் 10ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய கைத்தொழில் பேட்டையொன்றை உருவாக்க இருந்தோம். ஆனால், அதனை செய்யவிடாது தடுத்தனர். ஹம்பாந்தோட்டைக்கு கைத்தொழில் பேட்டை வேண்டுமா? இல்லையா? என்பது பற்றி மஹிந்த ராஜபக்ஷவும், கோட்டாபய ராஜபக்ஷவும் பொது மேடையில் கருத்து வெளியிட வேண்டும். 

காலி முகத்திடலை 40மீற்றர் அகலப்படுத்தவுள்ளோம். புகையிரத சேவை முதல் போக்குவரத்துத்துறையை விரிவுப்படுத்தியுள்ளோம். 

புதிய இலங்கையை உருவாக்க வேண்டுமா? அல்லது மெதமுலன குடும்ப வளவை உருவாக்க வேண்டுமா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். 

சஜித் பிரேமதாசவை மத்திய கொழும்பில் வந்து பணி புரியுமாறு கோரினேன். ஆனால், அவர் அதனை மறுத்துவிட்டார். ஏழைகளுடன் ஹம்பாந்தோட்டையில் பணிபுரிய ஆசைப்படுகிறேன் என்றார். அதன்படி அங்கு சென்று அடிமைத் தனத்திலிருந்தும் குடும்ப ஆட்சியை ஒழிக்கும் வகையிலும் அவர் செயற்பட்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தார். 

சஜித் மக்கள் தலைவன். அதனால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்நிறுத்த தீர்மானித்தோம். சஜித் மக்களால் உருவான மக்கள் தலைவன். 

அழிக்கும் (TERMINATOR) ஒருவரை நிறுத்தியுள்ளதாக பஸில் ராஜபக்ஷ கூறியுள்ளார். மக்கள் தலைவன் வேண்டுமா? அல்லது நாட்டை அழிக்கும் தலைவன் வேண்டுமா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். 2015ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். அதற்காக அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Fri, 10/11/2019 - 09:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை