கடல் ஆமையின் இறைச்சியை சாப்பிட்டே உயிர்வாழ்ந்தோம்

உயிர்பிழைத்து வீடு திரும்பிய மீனவர்கள்

கொண்டு சென்ற உணவு மூன்று நாட்களில் தீர்ந்துவிட்டது. பிறகு கடலாமையைப் பிடித்து இரத்தத்தை குடித்து இறைச்சியை அவித்துச் சாப்பிட்டோம். உயிர்தப்புவோம் என்று எண்ணவில்லை.
இவ்வாறு காரைதீவிலிருந்து ஆழ்கடலுக்குச்சென்று காணாமல்போன சாய்ந்தமருது மற்றும் காரைதீவைச் சேர்ந்த மூன்று மீனவர்களில் 22 நாட்களுக்குப் பிறகு வீடுதிரும்பிய சாய்ந்தமருதைச் சேர்ந்த சீனிமுகம்மது ஜூனைதீன் றியாஸ் (வயது 36) தழுதழுத்தகுரலில் கூறினார்.
மீண்ட மற்றுமொரு மீனவர் இஸ்மாலெவ்வை ஹரீஸ் (வயது 37) உடல் உளரீதியில் மிகவும் பலயீனமுற்று பேசமுடியாதவராக இருந்தார். மூன்றாமவரான காரைதீவைச் சேர்ந்த சண்முகம் சிறிகிருஸ்ணன் (வயது 47) என்பவர் ஆழ்கடலில் வைத்து 10வது நாளில் மரணமானார்.
மீனவர் றியாஸ் மேலும் கூறுகையில்:
நாம் மூவரும் கடந்த 18ஆம் திகதி பிற்பகல் 2.30மணியளவில் காரைதீவு மாளிகைக்காடு துறையிலிருந்து வலைகளுடன் மீன்பிடிப்பதற்காக இயந்திரப்படகில் ஆழ்கடலுக்குச்சென்றோம். அங்கு வலைகளை இறக்கியபோது மாலை 6.30 மணியிருக்கும் கடும் காற்றுவீசியது. சற்றுநேரத்தில் எமது படகு இயந்திரம் இயங்கமறுத்தது.
அக்கரைப்பற்றுக்கு அப்பால் செல்லும் தூரம். ஓரளவாக காடு தெரிந்தது. காற்றுமிகவும் வேகமாக வீசியது. வலையை மீண்டும் ஏற்றினோம்.
நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தோம். அப்போது சில படகுகள் எமது பக்கம் வந்தன. நாம் டோர்ச்லைற் அடித்து சிக்னல் காட்டினோம். என்றாலும் அவர்கள் கிட்டவராமல் திரும்பிப்போய்விட்டார்கள்.
நாம்கொண்டுபோன சாப்பாடு 3 நாட்களில் முடிந்துவிட்டது. தண்ணீரும் இல்லை. கடலில் வரும் கடல் ஆமையைப் பிடித்து இரத்தத்தைக் குடித்தோம். அதன் இறைச்சியை அவித்து உண்டோம். பின்னர் களைப்பு வரும்.
பத்தாவது நாளில் எம்முடன்வந்த தமிழ் சகோதரர் சிறிகிருஸ்ணன் உயிரிழந்தார்.
அவரது உடலை 6 நாட்கள் படகில் வைத்திருந்தோம். கடும் நாற்றமெடுத்தது. 8வது நாளில் உடலை கடலில் இறக்கினோம். எமக்கு அதைக்கடலில் இடும்போது உசிர்போறமாதிரி இருந்தது.
21வது நாளில் சகோதர சிங்கள மீனவரின் படகு அங்கு வந்து எம்மைக்கண்டது. அங்கே எமக்கு உணவு தண்ணீர் தந்து ஆதரித்தார்கள். பின்பு எம்மை அவர்கள் படகில் ஏற்றியதோடு எமது படகையும் கட்டியிழுத்துவந்தார்கள்.
படகு திருகோணமலை துறைமுகத்திற்கு வந்துசேர்ந்ததும் துறைமுக பொலிசார் எம்மை அழைத்து ஆஸ்பத்திரிக்குக்கொண்டு சேர்த்தனர். பின்னர் சிகிச்சயைளிக்கப்பட்டது என்றார்.

காரைதீவு குறூப் நிருபர்

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை