விஞ்ஞானபூர்வமான சுற்றாடல் கட்டமைப்பு உருவாக்கப்படும்

71 வருடங்களாக எமது நாட்டை ஆட்சி செய்துவரும் இரண்டு பிரதான கட்சிகளும் சுற்றாடலை முற்றாக நாசமாக்கியுள்ளன. வன வளம், கனிம வளம், கடல் வளம் என சுற்றாடலின் அனைத்துக் கூறுகளையும் நாசகரமாக்கியுள்ளனர். எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த விஞ்ஞானபூர்வமான சுற்றாடல் கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான அனைத்துத் திட்டங்களும் தேசிய மக்கள் சக்தி வகுத்துள்ளதாக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் சுற்றாடல் கொள்கைகளை வெளியிடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

எமது நாட்டில் பல்வேறு துறைகள் காணப்படுகின்றன. அதில் விவசாயம் இடம்பெறும் துறையாக சுற்றாடல் காணப்படுகிறது. அதிகம் கவனம் செலுத்தப்படாத ஒரு துறையாகவே இது காணப்படுகிறது.

சூரிய சக்தி நிறைந்த நாடே எமது நாடு. மத்திய மலை நாட்டிலிருந்து 103 நதிகள் உருவெடுப்பதுடன், 94 உப நதிகளும் பிரிந்து செல்கின்றன.

பாரியளவில் குடி தண்ணீர் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம். 2014ஆம் ஆண்டு சிறுநீரக நோயின் காரணமாக 2,147 பேர் உயிரிழந்தனர்.

2015இல் 1,901 பேரும், 2016இல் 1,788 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மொத்தமாக கடந்த மூன்று வருடங்களில் 5,836 பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அநுராதபுரத்துக்குச் சென்று பார்வையிட்டால் அதிகமாக தண்ணீர் விற்பனை கடைகள்தான் உள்ளன.

வீடு வீடாக வந்தும் தண்ணீரை விற்பனை செய்கின்றனர்.

மறுபுறத்தில் குப்பை மேடுகள் சரிந்து வீழ்வதால பலர் உயிரிழக்கின்றனர். உலகளாவிய இரசாயனக் குப்பைகளை கொண்டுவந்து களஞ்சியப்படுத்தும் நாடாக எமது நாட்டை மாற்றியுள்ளனர். கடல் சூழல் ஒருபுறம் நாசமடைகிறது. கடந்த 34 மாதத்தில் மாத்திரம் 340 யானைகள் உயிரிழந்துள்ளன.

எமது நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான நாடு, சுத்தமான கடற்கரை மற்றும் இராசானப் பாவனைகளற்ற உணவுகளை பெற்றுக்கொடுப்பது எமது தார்மீக கடமையாகும்.

சுற்றாடலை பாதுகாக்க புகை வெளியேறுவதை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் முதலில் அவசியமாகும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 10/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை