மட்டக்களப்பில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன அபிவிருத்திக் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உலக வங்கியினால் முன்னெடுக்கப்படும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய அபிவிருத்திற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்றுமுன்தினம் (09) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய அபிவிருத்தி திட்டமானது இலங்கையில் 11 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இவற்றில் மட்டக்களப்பு மாவட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் கீழ் முந்தானை ஆறு அணைக்கட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டு திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இத்திட்டத்திற்காக மொத்தமாக 140 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் பங்களிப்புக்காக 125 மில்லியன் அமெரிக்க டொலர்களும் இலங்கை அரசினுடைய நிதியாக 10 மில்லியன் டொலருமாக இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 11 மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான விசேட வேலைத்திட்டமானது தொடர்ந்து வெள்ளம், வரட்சி இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படுகின்ற மாவட்டங்களுக்காகவே இவ்வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய வேலைத்திட்டத்திற்கு மாவட்டத்தின் பங்குதார்கள் அனைவரையும் இணைந்த வகையில் இவ்வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

உலக வங்கியின் மூலம் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் மூலமாக நாட்டு மக்களின் விவசாய உற்பத்தி திறனை மேம்படுத்தி நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் மூலமான தன்னிறைவை காண்பது தான் இத்திட்டத்தின் முக்கிய கருப்பொருளாக அமைகின்றது.

(வெல்லாவெளி தினகரன் நிருபர்-)

Fri, 10/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை