மருதமுனை எலைட் வெற்றிக் கிண்ணம்: மருதமுனை கல்பனா அணி சம்பியன்

மருதமுனை எலைட் விளையாட்டுக்கழகத்தின் 27வது வருட நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்டு வந்த 'எலைட் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2019' இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் கழகத்தின் தலைவர் எம்.ஐ.நஜிமுல் றியாஸ் தலைமையில் (27) ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப.3.00 மணிக்கு மருதமுனை மசூர்மௌலான விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

அணிக்கு 11 பேர் கொண்ட 7 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக நடைபெற்று வந்த இந்த சுற்றுப் போட்டியில் 16 அணிகள் பங்கு பற்றியிருந்தன. இறுதிப் போட்டிக்கு மருதமுனை கல்பனா வி.கழகமும் எலைட் வி.கழகமும் தெரிவாகின.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய எலைட் விளையாட்டு கழகத்தினர் 7 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

வெற்றி இலக்கு 52 ஓட்டங்கள் எனும் நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மருதமுனை கல்பனா அணிக்கு ஆரம்பம் சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. முதலாவது ஓவரிலேயே 1 ஓட்டத்தை பெற்ற நிலையில் 2 விக்கட்டுக்களை இழந்தன. எனினும் மூன்றாவது விக்கட்டுக்காக இணைந்து கொண்ட ஏ.எம். முனீஸ் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 17 பந்துகளுக்கு 6 சிக்சர்கள் அடங்கலாக 43 ஓட்டங்களை பெற்று கல்பனா அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். இறுதியில் 2 ஓவர்கள் மீதமிருக்க 3 விக்கட்டக்களை மாத்திரம் இழந்து 52 ஓட்டங்களை பெற்று சம்பியன் கிண்ணத்தை தம்வசப்படுத்திக் கொண்டனர்

மருதமுனை இல்ஹாஸ் பூட் சிட்டி உரிமையாளர் பி.எம்.எம்.இல்ஹாஸ் இறுதிப் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பியன் கிண்ணத்தை வென்ற கல்பனா அணிக்கு 25000 ரூபா பெறுமதியான வெற்றிக்கிண்ணத்தை வழங்கிவைத்தார். கௌரவ அதிதியாக கலந்து கொண்ட எலைட் விளையாட்டு கழகத்தின் செயலாளர் கல்முனை சுப்பர் சென்டர் உரிமையாளர் ஏ.ஆர்.முஹம்மட் அஸாம் இரண்டாம் இடத்தை பெற்ற எலைட் அணிக்கு 15000 ரூபா பெறுமதியான வெற்றிக்கிண்ணத்தை வழங்கிவைத்தார். தொடரின் சிறந்த பந்து வீச்சாளர் எம்.முஹாஸ், துடுப்பாட்ட வீரர் எம்.என்.எம்.சிபார் ஆகியோருக்கு 8000 ரூபா பெறுமதியான மின் விசிறிகளும் பரிசாக வழங்கப்பட்டன.

மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட மருதுமுனை கிறிஸ்டல் அணிக்கும், நான்காம் இடத்தை பெற்றுக் கொண்ட மருதம் அணிக்கும் விசேட வெற்றிக் கிண்ணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

சிறப்பு ஆட்டக்காரர்களாக தெரிவான 10பேருக்கு ஆட்ட நாயகன் விருதுகளும் வழங்கப்பட்டன. இவைதவிர விசேட பரிசுப் பொருட்கள், பார்வையாளர்களுக்கான சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் என பல பரிசுத்திட்டங்களும் கலந்து கொண்ட அதிதிகளால் வழங்கப்பட்டன.

பெரியநீலாவணை விசேட நிருபர்

Tue, 10/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை