சமூக வலைத்தளங்களில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பாராட்டு

லாஹூரில் திங்கட்கிழமை (7) இடம்பெற்று முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான 20க்கு 20 போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, குறித்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 2- – 0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

உலகில் முதல்நிலை 20க்கு20 அணியான பாகிஸ்தானை இலங்கை கிரிக்கெட் அணி இளம் வீரர்களுடனேயே தோற்கடித்து, சாதனை வெற்றி ஒன்றினை பதிவு செய்திருப்பதால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு சமூக வலைத்தளமான டுவிட்டரில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் காணப்படுகின்றது.

நீண்டகால காத்திருப்புகளின் பின்னர் இலங்கை அணியில் வாய்ப்பினை பெற்றுக்கொண்ட பானுக்க ராஜபக்ஷ தனது அதிரடி துடுப்பாட்டம் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது 20க்கு20 போட்டியில் கன்னி அரைச்சதத்தை பதிவு செய்திருந்ததோடு, இலங்கை அணியின் வெற்றியினையும் உறுதி செய்ய பிரதான காரணமாக இருந்தார். மொத்தமாக 48 பந்துகளை எதிர்கொண்டிருந்த பானுக்க, 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 77 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இவ்வாறாக வெற்றிக்கு காரணமாக இருந்த பானுக்க ராஜபக்ஷவின் துடுப்பாட்டத்தினை இலங்கை கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தலைவராக செயற்படும் திமுத் கருணாரத்ன பாராட்டியிருந்ததோடு, பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் இலங்கை 20க்கு20 அணியின் தலைவராக இருக்கும் தசுன் ஷானக்கவினையும் வாழ்த்தியிருந்தார்.

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அஞ்சலோ மெத்திவ்ஸ் இரண்டாவது 20க்கு20 போட்டியில் இலங்கை அணியின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது எனக் குறிப்பிட்டிருந்ததோடு, இரண்டு 20க்கு20 போட்டிகளிலும் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த வீரர்கள் அனைவரையும் பாராட்டினார்.

இலங்கை அணிக்கு ஆடிவரும் இளம் வீரர்களான குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல போன்றோரும், இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும், இலங்கை அணிக்காக 20க்கு20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் அதிரடி துடுப்பாட்ட வீரரான டில்சான் முனவீரவும் தனது வாழ்த்துகளை பகிர்ந்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான ரசல் ஆர்னோல்ட் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆட்டத்தினை பாராட்டியதோடு, இதுதான் எதிர்கால இலங்கை கிரிக்கெட் அணி எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், பானுக்க ராஜபக்ஷவிற்கும் ரசல் அர்னோல்ட் சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

கிரிக்கெட் போட்டிகளுக்காக கடமையாற்றும் மற்றுமொரு தொலைக்காட்சி வர்ணனையாளர்களில் ஒருவரான ரொஷான் அபேசிங்கவும், இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். அதோடு இன்னும் பேசியிருந்த அவர், வெற்றியினை விட இலங்கை அணி சிறந்த எதிர்காலத்திற்காக அடித்தளம் ஒன்றை கொண்டிருப்பது மகிழ்ச்சி தருவதாக குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் ஊடகவியாலளர்களான ஸெய்னப் அப்பாஸ் மற்றும் மஸ்கர் அர்சாத் ஆகியோரும் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

இவர்களில் ஸெய்னப் இரண்டாம் நிலை அணி ஒன்றுடன் வந்து இலங்கை அணி சாதனை வெற்றி பெற்றது சிறப்பாக இருக்கின்றது எனக் கூறியதோடு, மஸ்கர் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட பானுக்க ராஜபக்ஷ இலங்கை அணி இனம் கண்ட புதிய ஹீரோ எனக் குறிப்பிட்டார்.

Thu, 10/10/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக