இளம் வீரர்களின் தன்னம்பிக்கையை பாராட்டும் தசுன் சானக்க

பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில் வெற்றி பெறுவதற்கு இலங்கை அணியில் உள்ள இளம் வீரர்களின் முன் ஆயத்தமும், தன்னம்பிக்கையும் தான் கைகொடுத்திருந்தது என இலங்கை டி-20 அணியின் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்தார்.

இலங்கை அணிக்காக முதல் முறையாக தலைவராகச் செயற்பட்டு பெற்றுக் கொண்ட இந்த வெற்றி குறித்து தசுன் ஷானக்க போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது,

இந்தப் போட்டிக்கு நாங்கள் சிறந்த முறையில் ஆயத்தமாகி இருந்தோம். நாங்கள் ஒருநாள் போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடியிருந்ததுடன், 3 ஆவது போட்டியில் வெற்றியின் விளிம்பு வரை வந்தோம்.

அணியில் இன்னுமொரு சுழல் பந்துவீச்சாளர் இடம்பெற்றிருந்தால் அந்தப் போட்டியிலும் நாங்கள் தான் வெற்றி பெற்றிருப்போம் என போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நான் தெரிவித்திருந்தேன். ஆனால் இந்தப் போட்டியை எடுத்துக் கொண்டால் எமது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியிருந்தனர். இதனால் எதிரணியனரை குறைந்த ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த முடிந்தது.

உண்மையில் அணியில் உள்ள இளம் வீரர்கள் போட்டி பற்றிய சிறப்பானதொரு முன் ஆயத்தைப் பெற்றுக் கொண்ட காரணத்தினால் தான் வெற்றிபெற முடிந்தது. அதுமாத்திரமின்றி, உலகின் முதல்நிலை டி20 அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

இந்தப் போட்டிக்கு வருவதற்கு முன் எனக்கு கிடைத்த அணி குறித்து மிகப் பெரிய நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையுடன் தான் எமது திட்டத்தை முன்னெடுத்தோம். இதற்காக நாங்கள் ஒருசில உபாயங்கள் மற்றும் நுணுக்கங்களையும் கையாண்டோம். எனவே அணித் தலைவராக நான் மிகப் பெரிய வெற்றியையும் இதன் மூலம் பெற்றுக் கொண்டேன்.

அத்துடன், எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் சிறந்த முறையில் தயாராகி தொடரைக் கைப்பற்றி இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுப்பதற்கு முயற்சிப்போம் என்றும் அவர் கூறினார்.

Mon, 10/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை