முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்கவே ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் போட்டியிடுகிறார்

முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காகவே ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார் என ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்தார்.

காத்தான்குடியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்படவுள்ள தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று நேற்றுமுன்தினம் (07) நடைபெற்ற போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காகவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுகின்றார். அவரின் இந்த செயற்பாடு முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் துரோகமான செயலாகும்.

ஆளுநர் பதவியை அவர் இராஜினாமா செய்த போது இந்த நாட்டியிலுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு அவருக்காக குரல் கொடுத்தோம், முஸ்லிம் சமூகத்திற்கான ஒற்றுமைப்பயணத்தை ஆரம்பித்தோம். அந்த ஒற்றுமையை இன்று ஹிஸ்புல்லாஹ் சீர் குலைத்துள்ளார்.

முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்கும் செயற்பாட்டை அவர் செய்திருக்கின்றார்.

ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி தேர்தலில் ஏன் போட்டியிடுகின்றார். இது யாருடைய நிகழ்ச்சி நிரல் என்பதெல்லாம் மக்களுக்கு நன்கு தெரிந்த விடயமாகும்.

முஸ்லிம் மக்களுடைய வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கு சென்று விடக் கூடாது என்பதற்காக முஸ்லிம்களுடைய வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் பக்கம் பல அரசியல் தலைவர்கள் இணைந்து கொண்டு வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுச் சென்றவர்கள் எல்​லோரும் சஜிதின் வருகையையடுத்து மீண்டும் அவர் பக்கம் அணி திரள்கின்றனர்.

திஸ்ஸ அத்தநாயக்கா, எஸ்.பி.நாவின்ன போன்றோர் சஜிதின் பக்கம் சென்று விட்டனர். இப்படி சஜிதின் ஆதரவு பெருகி வருகின்றது.

கடந்த கால பாடங்களையும் படிப்பினைகளையும் வைத்து முஸ்லிம் சமூகம் தெளிவாக ஒரு முடிவை எடுக்கும் என தெரிவித்தார்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

Wed, 10/09/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக