ஐ.தே.க. அரசின் அபிவிருத்திகள் குறித்து ஊடகங்கள் பாராமுகம்

நான்கரை ஆண்டில் கடனை குறைத்து பாரிய அபிவிருத்தி

அரசின் முழுமையான அபிவிருத்திப் பணிகள் குறித்து பிரதமர் விசேட அறிக்கை

2020 இல் மற்றொரு பொருளாதாரப் பாய்ச்சல்

சஜித் ஜனாதிபதியானதும் பிரதமராக பணியைத் தொடர்வேன்

நாட்டில் கடந்த ஆட்சியாளர்கள் பெற்றிருந்த கடன் சுமையைக் குறைத்து நான்காண்டு காலத்தில் எதிர்பார்த்த அபிவிருத்தி இலக்கை பூர்த்திசெய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (30) தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் செய்த அபிவிருத்திப்பணிகள் குறித்து பிரசாரம் செய்யாததைச் சாட்டாக எடுத்துள்ள எதிரணியினர் குறுகிய இலாப நோக்கில் விஷமப் பிரசாரம் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து விளக்கும் வகையில் நேற்று அலரி மாளிகையில் நடத்திய  செய்தியாளர் சந்திப்பிலே பிரதமர் இவற்றைத் தெரிவித்தார். இங்கு பேசிய பிரதமர்:

அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும், பிரதமர் பதவியைத் தொடர்வேன். அதற்குப் பின்னர் ஜனாதிபதியுடன் இணைந்து நாட்டின் எதிர்காலத்தை சுபீட்சத்துக்கு கொண்டு செல்வேன்.

நாம் ஆட்சிக்கு வந்தவுடன் ராபக்ஷக்கள் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தினோம். 2018ஆம் ஆண்டில் 91 பில்லியன் ரூபாய் ஆரம்ப கையிருப்பு மிகுதியாக இருந்தது.

2015இல் எமது அரசாங்கம் பதவியேற்ற நாள் முதல் இவ்வருடம் வரை கடந்த ஐந்தாண்டுகளில் நாம் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த அறிக்கையை உங்கள் முன்பாக சமர்ப்பிக்க விரும்புகின்றேன். கடந்தகாலத்தில் நாம் மேற்கொண்ட துரித அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பிரசாரப்படுத்தவோ, பெரியளவில் விளம்பரப்படுத்தவோ முற்படவில்லை. இதன் காரணமாகவே நாம் என்ன செய்தோம் என்பதை மக்களால் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது போனது.

நான் இந்த இடத்தில் அரசியல் பேச முற்படவில்லை. ஆனால் முக்கியமானதொரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நாட்டில் சுதந்திரமானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பக்கூடிய நடவடிக்கைகளை கடந்து வந்த குறுகிய காலத்துக்குள் முன்னெடுத்தோம். இதனைக் கூட சில ஊடகங்கள் கண்டவாறு திரிபுபடுத்தி பிரசாரப்படுத்தின. சுயாதீன ஆணைக்குழுக்களான நீதித்துறை, பொலிஸ் துறை, சட்டவாதிக்கம், ஊடக சுதந்திரம், தகவலறியும் உரிமை, உட்பட பல்வேறு ஆரோக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

2015 இலிருந்த கடன் சுமை எமக்குப் பெரும் சவாலாகவே இருந்தது.

சாமர்த்தியமாகவும், சாதுரியமாகவும் விடயங்களைக் கையாண்டோம். கடன் சுமையை காரணம் காட்டி அபிவிருத்தி முயற்சிகளை கைவிடவில்லை.அதன் பிரதிபலனை ஊடகங்களும், மக்களும் அனுபவித்துக் கொண்டுதானுள்ளன.

அதேபோன்று கடனைத் திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுத்ததோடு அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுத்தோம். 2015 முதல் 2019 வரை கணிசமான முன்னேற்றத்தை எட்டியுள்ளோம். உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்கள் இடம்பெறாதிருந்தால் இன்னும் முன்னோக்கிச் சென்றிருக்க முடியும். எனினும், எமது அபிவிருத்தி இலக்கை எட்டுவதற்கு 2020 இல் மற்றொரு பாய்ச்சலை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.

2015இல் தயாரித்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தூரநோக்கு திட்டங்களை படிப்படியாக முன்னெடுத்து வந்துள்ளோம்.கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் 93726 முன்னெடுக்கப்பட்டன.

386000 வீடமைப்புக் கடன் திட்டங்கள் , 2553 கிராம எழுச்சித் திட்டங்களில் 14270 பேர் பயனடைந்தனர். கொழும்பு மாநகரில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக 3,910 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்வித் திட்டத்துதுக்கு முன்னுரிமை கொடுத்து அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 10,063 ஆகும். சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர் எண்ணிக்கை 75,650 ஆகும். 70 வயதைத் தாண்டிய 6,10,698 பேர் முதியோர் உதவியை பெற்றுக்கொள்கின்றனர்.

இவ்வாறான பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. கட்சி அரசியலை மட்டும் நோக்காகக் கொண்டு தாம் செயற்படவில்லை. நாட்டின் அபிவிருத்திக்கே முன்னுரிமை வழங்குகின்றோம். தாம் எதுவும் செய்யவில்லை என குதர்க்கம் பேசுவோர் இதற்கு என்ன பதில் சொல்வார்கள் எனக் கேட்க விரும்புகின்றேன்.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மேலும் முன்னேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மத்தள சர்வதேச விமான நிலையத்தில் இன்று மயில்களை மட்டுமே பார்க்க முடிகிறது. விரைவில் இந்திய விமான சேவையுடன் இணைந்து அதனையும் தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மட்டக்களப்பிலும் ஒரு சர்வதேச விமான நிலையத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் முழுமையான அபிவிருத்தி திட்டங்களை மக்கள் அறிந்துகொள்வதற்கான பணியை ஊடகங்கள் செய்யவேண்டும். எம்மை விமர்சிப்பதைப் பற்றி நாம் கவலைப்படவில்லை, அலட்டிக்கொள்ளவும் மாட்டோம். அதேசமயம் உண்மை நிலையையும் மக்களுக்கு ஊடகங்கள் வழங்கவேண்டும் என்றார்.

எம்.ஏ.எம்.நிலாம்

Thu, 10/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை