நாட்டை கள்வர்களால் கட்டியெழுப்ப முடியாது

ஜனாதிபதி வேட்பாளர்  அநுர குமார திசாநாயக்க

71 வருடமாக மாறி மாறி ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பியும் ஆட்சியில் அமர்த்தியும் பாத்திருக்கிறோம். இவர்கள் நாட்டிற்கு எதனை செய்திருக்கிறார்கள். மருதமுனையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் மிக முக்கியமான பிரதானமான மூன்று காரணங்கள் உள்ளன. இன்று செல்வந்தர்களுக்கு ஒரு சட்டம் ,வறியவர்களுக்கு ஒரு சட்டம், அதிகாரம் உள்ளவர்களுக்கு இன்னொரு சட்டம் என்று - நீதி மறுக்கப்பட்டு செல்கிறது.

மாங்காய் திருடியவன், தேங்காய் திருடியவன் உள்ளே இருக்க மத்திய வங்கியை கொள்ளை அடித்தவர்கள் வெளியிலே இருக்கிறார்கள். இதுதான் நீதி சட்டமா? சாதரணமாக கிராமத்தில் நீங்கள் குற்றம் செய்தால் பொலிசார் உடனே உங்களை தேடிப்பிடித்துவிடுவார்கள். ஆனால் தாஜூதீனின் கொலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. லசந்த, எக்னெலிகொட போன்றோரை கொலை செய்தவர்களும் கண்டுபிடிக்கவில்லை. இதற்கு பின்னால் பெரியதொரு அரசியல் இருக்கிறது. நாங்கள் இந்த நாட்டில் சிங்களம், முஸ்லிம், தமிழ் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் ஏழை - பணக்காரன் என்று பார்க்காமல் சட்டத்தை சமமாக அமுல்படுத்துவோம். அனைவருக்கும் சமமான நீதி வழங்குகின்ற தலைவர் தேவையில்லையா? இதனை நாட்டில் உருவாக்குவோம்.

இரண்டாவது வீண்விரயம் இல்லாத ஒரு நாடு நமக்கு வேண்டும். எந்த ஒரு நாட்டையும் கள்வர்களால் கட்டியெழுப்ப முடியாது. நாட்டின் நிர்வாகிகள் பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடி வருகின்றனர். இதனை நிறுத்த வேண்டும். அதனை நாம் தான் செய்வோம் முதலில் இதனை ஜனாதிபதியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

எல்லா ஜனாதிபதிகளும் கள்வர்கள். இல்லையென்றால் இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள் நான் ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு ஜனாதிபதிக்கும் கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுகிறது. அவர்களுடைய வீடு, வாகனம், எரிபொருள், சம்பளம், நிருவாக செலவு மற்றும் அவர்களை நிர்வகிப்பதற்கு பாதுகாப்பு என்று கோடிக்கணக்கான நிதிகள் செலவு செய்யப்படுகின்றன. ஏன் அவர்களுடைய மனைவிமாரும் அரசாங்க பணத்தில்தான் நிர்வகிக்கப்படுகிறார்கள்.

பிரேமதாசவுடைய மனைவிக்கு இன்றும் அரசாங்கம் மக்கள் நிதியைதான் செலவு செய்து கொண்டிருக்கிறது. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு கொழும்பு ரெறிங்டன் பகுதியில் சொகுசு வீடு இருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு விஜயராம மாவத்தையில் பாரி வீடு இருக்கிறது. மைத்திரிபால சிறிசேன அவர்கள் நவம்பர் 17 ஓய்வூதியம் பெறுவதற்கு இருக்கிறார்.

கடந்த வாரம் அமைச்சரவையில் 800 கோடி ரூபா பெறுமதியான வீட்டை எடுத்துக்கொண்டார். எதற்காக அவர்கள் வாழ்வதற்காக இவைகளெல்லாம் பொதுமக்களின் வரிப்பணம் ஆகும். இந்த வீண் விரயத்தை இல்லாமல் செய்ய வேண்டும். இதனை கோட்டாவோ அல்லது சஜீத்தையோ சொல்லச் சொல்லுங்கள் அவர்கள் சொல்ல மாட்டார்கள் ஏனென்றால் அவர்களுடைய குடும்பத்தினர் இவைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஓய்வு ஊதியம் மட்டும் போதும். இதனை எம்மால் மட்டும்தான் செய்து காட்டமுடியும்.

ஜனாதிபதிமாருக்கு நாடுபூராகவும் மாளிகைகள் உண்டு. நுவரெலியா, கண்டி மஹியங்கனை, அனுராதபுரம், உடவளவை, யாழ்ப்பாணம், பாசிக்குடா என நாடுபூராகவும் ஜனாதிபதி மாளிகைகளை உருவாக்கி வைத்திருக்கிறாரகள். வீட்டை மட்டும் சுத்தம் செய்வதற்கு 50 பேர் இருக்கிறார்கள். உணவு சமைக்க 7 பேர். ஒரு கிராமத்தை நிர்வகிக்கும் பணம் இந்த மாளிகைகளுக்கு செலவு செய்யப்படுகிறது. பொலிஸ் நிலையத்தில் வெறும் 70 பேர் கடமையாற்ற ஜனாதிபதி மாளிகையில் 200 பொலிசாருக்கு மேல் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருக்கின்றனர். விமான போக்குவரத்துக்கு செலவு செய்யப்படுகிறது. நாம் ஆட்சிக்கு வந்ததும் இந்த மாளிகைகள் அனைத்தையும் உல்லாச ஹோட்டல்களாக மாற்றுவோம்.

இவற்றை அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டும் வழியாக நாம் மாற்றியமைப்போம். அப்படியான ஒரு ஆட்சியாளர் தேவையா இல்லையா என்பதை மக்கள் சொல்லவேண்டும் என்றார்.

பெரியநீலாவணை விசேட நிருபர்

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை