வெற்றிபெற முடியாத ஜே.வி.பிக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்க வேண்டாம்

ஜே.வி.பி.க்கு வாக்களிப்பது என்பது மறைமுகமாக கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாகும். ஜே.வி.பி. வேட்பாளர் ஒருபோதும் வெற்றிபெறப் போவதில்லை. சமூகத்துக்காக குரல்கொடுத்து பேசினார்கள் என்பதற்காக வெற்றிபெறாத ஒருவருக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்கவேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை மத்தியகுழுக் கூட்டம் கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்றுமுன்தினம் (26) பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் இல்லத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், - ஜே.வி.பி. ஜனாதிபதி தேர்தலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. வெற்றி பெறுவது ஒருபோதும் சாத்தியமில்லை. இந்நிலையில் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம்கள் வாக்களிப்பது சஜித் பிரேமதாசவின் வெற்றி வாய்ப்பினை குறைத்து, கோட்டாபயவை வெற்றிபெற வைக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுபீட்சமான, நிம்மதியாக வாழ்வதற்கு சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டும். நிம்மதியான, சுபீட்சமான சகவாழ்கை உறுதிப்படுத்தும் வேட்பாளராக நாங்கள் இவரை அடையாளம் காண்கிறோம். அதைவிடுத்து, அடிமைத்தனமான சகவாழ்வுக்குள் மக்களை தள்ளிவிட நாங்கள் ஒருபோதும் தயாரில்லை. நமக்கு கிடைத்திருக்கும் இந்த பொன்னான வாய்ப்பை மிகவும் புத்திசாதுரியமாக பயன்படுத்த வேண்டும்.

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக விசமப் பிரசாரங்களை மேற்கொண்ட இனவாதக் கும்பல்கள் இப்போது மொட்டு அணியின் பக்கம் சங்கமித்திருக்கின்றன. முஸ்லிம்களின் உரிமைகளில் கைவைப்பதற்கு எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு வந்துள்ளனர். சுயகெளரவமுள்ள நாங்கள் இந்த அணியை முற்றாக நிராகரிக்க வேண்டும். சிறுபான்மை சமூகங்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சஜித் பிரேமதாசவை தவிர வேறொரு தெரிவு இருக்க முடியாது. எனவே, சஜித்தை வெற்றிபெற வைக்க அனைவரும் பாடுபட வேண்டும். கோட்டாபய வெற்றி பெற்றால் நாட்டில் நிம்மதியாக வாழ முடியாது என்பதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் பைசால் காசீம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.நஸீர், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன் அலி, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்)

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை