சிவாஜிலிங்கம் போட்டியிடுவதற்கும் ரெலோ கட்சிக்கும் தொடர்பு இல்லை

அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஜனாதிபதித் தேர்தலில் எம்.கே. சிவாஜிலிங்கம் போட்டியிடுவதற்கும் எமது கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவ்வாறு தேர்தலில் போட்டியிடும் முடிவை கட்சி எடுக்கவும் இல்லை. இது தொடர்பில் அவருக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படுமென ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின்

ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்து ஜனாதிபதித் தேர்தலில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கும் இரண்டாம் சுற்றுச் சந்திப்பு யாழில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இச் சந்திப்பின் முடிவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கட்சிக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. அவர் கட்சியைக் கேட்காமலே போட்டியிடுகின்றார். நிச்சயமாகக் கட்சியை கூட்டி அவருக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க இருக்கின்றோம். எமது கட்சிக்கும் சிவாஜிலிங்கம் எடுத்த முடிவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பொது வேட்பாளர் என்ற ரீதியில் அவரும் பரிசீலிக்கப்படுவாரா என்பதுதொடர்பில் எந்தவிதமான முடிவும் இதுவரையில் எடுக்கவில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் சிவாஜிலிங்கம் எங்கள் கட்சியினுடைய வேட்பாளர் அல்ல. கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளராக அவரைக் கருத முடியாது என்றார்.

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோஅமைப்பின் அரசியல் தலைவராகவே சிவாஜிலிங்கம் இருந்து வந்தார். இந்நிலையில், அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதற்காக கட்சியில் தான் வகித்த பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பருத்தித்துறை விசேட நிருபர்

Wed, 10/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை