கோட்டா போட்டியிடாத சூழ்நிலை ஏற்பட்டால் சு.க சிந்தித்தே செயற்படும்

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட முடியாத சூழ்நிலை எழுந்தால் அது புதியதோர் அரசியல் சூழ்நிலையாகும். அத் தருணத்தில் சிந்தித்தே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானமொன்றை எடுக்குமென அக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

5ஆம் திகதி வரை சு.கவுடன் கூட்டணியை அமைப்பதற்கான கதவை பொதுஜன பெரமுனவினருக்கு திறந்து வைத்துள்ளோம். சாதகமான தீர்மானமொன்றுக்கு அவர்கள் வருவார்களென்ற நம்பிக்கையுள்ளதெனவும் அவர் கூறினார்.

கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள சு.கவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

வலுவானக் கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்ந்து சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறது.

உடன்படிக்கையில் இடம்பெற வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம். கூட்டணிக்கான யாப்பில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர்களுக்கு விளக்கமளித்துள்ளோம்.

தீர்க்க முடியாத பிரச்சினையில்லையென பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ கூறியுள்ளார். ஆகவே, கூட்டணியை அமைப்பதற்கு சாதகமான முடிவொன்றை, பொதுஜன பெரமுனவினர் எடுப்பார்கள் என நம்புகின்றோம்.

எதிர்வரும் 5ஆம் திகதிவரை அவர்களுக்கு கால அவகாசம் உள்ளது. அதற்குள் முடிவை எடுக்கலாம்.

பொது சின்னத்தின் அவசியம் தொடர்பில் அவர்களுக்குத் தெளிவுப்படுத்தியுள்ளோம். நாட்டின் முற்போக்குச் சக்திகள் முதல் சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பயணிப்பதற்கான விடயங்களையே நாம் வலியுறுத்துகிறோம். பொது சின்னமொன்று இருந்தால்தான் அவ்வாறு பயணிக்க முடியும்.

ஆரம்பமே பிழையாக இருந்தால் அச் செயற்பாடு வெற்றியடையாது. வெற்றியை அடைவதற்கான அத்திவாரத்தை போடுவதற்கே சு.க முற்படுகிறது.

வீடொன்றின் அத்திவாரம் மணலுக்கு அடியில் இருந்தால் அது நீண்டகாலம் நிலைக்காது.

அமைச்சர் சஜித் பிரேமதாச தலையிலான ஐ.தே.கவின் குழுவினர் நேற்று ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடினர். அது அரசாங்கத்தின் விடயங்கள் பற்றிய சந்திப்பாக அமைந்தது. அரச தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியை எவர் வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஐ.தே.கவுடன் கூட்டணியை அமைக்கும் எந்தவொரு எண்ணமும் சு.கவுக்கு இல்லை.

எமது கொள்கைகளுடன் ஒத்துப்போகக் கூடியவர்களாக பொதுஜன பெரமுனவினரே உள்ளனர். அவர்களுடனான பேச்சுகள் தோல்வியடைந்தால் மறுபுறம் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் சு.க ஈடுபட்டுள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 10/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை